

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாகவே இருதரப்பிலும் பலமான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், போர் தீவிரமடைந்து வந்தது.
இந்நிலையில் நேற்று மாலை அடுத்த 5 நாட்களுக்கு ஈரான் மீது எவ்வித தாக்குதலும் நடத்தப்படாது என அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பு போர் நிறுத்தத்திற்கான அறிகுறி என்றே கருத்தப்பட்டது.
இந்நிலையில் வருகின்ற மார்ச் 28ஆம் தேதி இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக இன்று காலை அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
போர் பதற்றம் காரணமாக ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் அரசு மூடியதால், உலகமெங்கிலும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவியது. ஹார்மூஸ் ஜலசந்தியை பாதுகாக்க அமெரிக்கா நட்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்த நிலையில், ஒத்துழைப்பு தர எந்த நாடும் முன் வரவில்லை.
இருப்பினும் சீனா, ஜப்பான், வங்கதேசம் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த கப்பல்களுக்கு ஈரான் அரசு ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக அனுமதி செல்ல அனுமதி அளித்தது.
இந்நிலையில், அமெரிக்காவின் F-35 மற்றும் F-15 ஆகிய இரண்டு போர் விமானங்களை ஈரான் தாக்கியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு 48 மணி நேரத்திற்குள் ஹார்மூஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக திறக்காவிட்டால், ஈரானின் மின்சார உற்பத்தி கட்டமைப்பு அனைத்தையும் தாக்குவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால் எதற்கும் அடிபணியாத ஈரான், மின்சார கட்டமைப்புகளை தாக்கினால் அதனை மீண்டும் கட்டமைக்கும் வரை ஹார்மூஸ் ஜலசந்தியை திறக்க மாட்டோம் என அமெரிக்காவிற்கு பதில் எச்சரிக்கை விடுத்தது. இதன் பிறகு அடுத்த 5 நாட்களுக்கு ஈரான் மீது எந்தத் தாக்குதலும் நடத்தப்படாது என நேற்று மாலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். இதன்மூலம் இந்தப் போர் விரைவில் முடிவடைவதற்கான அறிகுறி தென்பட்டதாக கருதப்பட்டது.
இந்நிலையில் வருகின்ற மார்ச் 28ஆம் தேதி சனிக்கிழமை ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் போர் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், “ஹார்மூஸ் ஜலசந்தி வெகு விரைவில் திறக்கப்படும். ஈரான் மீதான தாக்குதல் போர் அல்ல; ராணுவ நடவடிக்கை தான். ஈரான் அணு ஆயுதங்களை பயன்படுத்தாது என உத்தரவாதம் அளித்திருப்பதால், இருதரப்பு தாக்குதல் குறித்த பேச்சுவார்த்தை மார்ச் 28-ல் நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எட்டப்படும்” என அவர் கூறினார்.
கிட்டத்தட்ட ஒரு மாத தாக்குதலுக்குப் பிறகு பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதால், உலக நாடுகள் சற்று நிம்மதி அடைந்துள்ளன.