கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்கு சுமார் ஐயாயிரம் புத்தகங்களை வழங்கிய நீதிபதி சந்துரு!

கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்கு சுமார் ஐயாயிரம் புத்தகங்களை வழங்கிய நீதிபதி சந்துரு!
Published on

ண்ணா நூற்றாண்டு நூலகத்தைவிட, மதுரையில் மிகப் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டு வருகிறது கலைஞர் நூற்றாண்டு நூலகம். ஆசியாவிலேயே மிகப் பெரியதும், சர்வதேச தரத்துடன் திகழப்போகும் இந்த நூலகத்தை வரும்15ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கிறார். இந்தப் புதிய நூலகத்துக்கு முன்னாள் நீதிபதி கே.சந்ருரு தம்மிடமிருந்து சுமார் 5000 புத்தகங்களை நன்கொடையாக வழங்கி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, "எனது சிறுவயதில் புத்தகம் வாங்க பொருளாதார வசதி இல்லை. எங்கள் வீடு தி.நகரில் இருந்தது. அங்கிருந்து, சி.ஐ.டி. காலனியிலுள்ள நூலகத்துக்கு நடந்தே சென்று படிப்பேன். இதுபோன்று மாவட்ட கிளை நூலகம், மாவட்ட நூலகம், கன்னிமாரா நூலகம் என நூலகம் நூலகமாக ஏறி இறங்கித்தான் எனது சிறு வயது கடந்தது. இடதுசாரி இயக்கத்தில் சேர்வதற்கு முன்பு திராவிடர் கழகத்தால் ஈர்க்கப்பட்டு, நாங்கள் குடியிருந்த வீட்டுக்கு மேல் வீட்டில் குடியிருந்த பெரியவரிடம் கெஞ்சி கூத்தாடி பெரியார் புத்தகங்களை வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். அதையெல்லாம் படித்த பிறகுதான் பக்தி பழமாக இருந்த நான், எனது பதினொறு வயதிலேயே இறை மறுப்புக் கொள்கைக்கு வந்துவிட்டேன். அதன் பிறகு, மார்க்சிஸ்ட் இயக்கத்துக்கு சென்றபோது நான் முதலில் படித்த புத்தகம் ராகுல் சாங்கிருத்தியாயனின் 'வால்காவிலிருந்து கங்கை வரை.' இது வரலாற்றுப் புரிதலைக் கொடுத்த புத்தகம் மட்டுமல்ல, என்னை அதிகமாக பாதித்த புத்தகமும் இதுதான்.

இளம் வயதில் புத்தகங்களே உலகமாக மாறி, கையில் இருந்த எல்லா காசுக்கும் புத்தகங்களையே வாங்கிக் குவித்தேன். எந்தளவுக்கு இதில் ஆர்வம் என்றால், வேர்க்கடலை பொட்டலப் பேப்பரில்கூட என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று படிப்பேன். வழக்கறிஞர் ஆன பிறகு படிப்பதற்காக நிறைய புத்தகங்களை சேர்க்க ஆரம்பித்தேன். அப்படி, சேர்க்க ஆரம்பித்தது இன்று சுமார் 5,000 புத்தகங்கள் என சேர்ந்து விட்டன. கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்கு நான் நூல்களைக் கொடுக்க இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவது, மதுரையில் கலைஞர் பெயரில் புதிய நூலகம் தொடங்கப்பட்டிருப்பதால் 13 மாவட்ட மாணவர்கள், பொதுமக்கள் பயன் பெறுவார்கள். அந்த நூலகத்துக்கு இப்போது 4,972 நூல்களை பரிசாக வழங்கியிருக்கிறேன். இரண்டாவது, நான், திடமாக இருக்கும்போதே இந்தப் புத்தகங்களை கொடுத்துவிட வேண்டும் என்ற எண்ணம். திடீரென்று சில வழக்கறிஞர்கள் இறந்துவிடுவார்கள். இதனால், அந்தப் புத்தகங்கள் தனிமைப்பட்டுவிடும். எனக்கு அப்படியெல்லாம் நடக்கக்கூடாது. நான், உயிரோடு இருக்கும்போதே எனது நூல்கள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்பதால் இப்போதே அதைக் கொடுத்துவிட்டேன்.

இவை அனைத்தும் நான் மதிப்புடன் வாங்கி தேர்ந்தெடுத்துப் படித்தப் புத்தகங்கள். ஒரேயொரு புத்தகத்தைத் தவிர, அனைத்துப் புத்தகங்களையும் நான் கொடுத்து விட்டேன்.  அது வள்ளலாரின் திருவருட்பா. எங்கள் அப்பா வள்ளலார் பக்தர். 1936ம் ஆண்டு வெளியான திருவருட்பா புத்தகத்தை அப்பா அடிக்கடி படிப்பார். நானும் வள்ளலார் மீது அபிமானம் உள்ளவன். அப்பா, இறந்த பிறகு திருவருட்பா புத்தகத்தை மட்டும் என் கையிலேயே வைத்துள்ளேன். வள்ளலார் குறித்து தீர்ப்பே கொடுத்திருக்கிறேன். அந்தத் தீர்ப்பைக்கூட வள்ளலார் குறித்த 29 புத்தகங்களைப் படித்துவிட்டுத்தான் தீர்ப்பு வழங்கினேன்.

கலைஞர் ஒரு தீவிர வாசகர். அவருக்கு முன்பும் பின்பும் இருந்த எந்த முதல்வரும் அவருக்கு இணையாக மாட்டார்கள். நான், மதுரையில் தீர்ப்பு கொடுத்தால்கூட படித்துவிட்டு உடனடியாக ரியாக்ட் செய்வார். 'அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்' என்ற எனது புத்தகத்தை படித்துவிட்டு முரசொலியில் 'நெறி தவறாத நீதியரசர் சந்துரு' என பாராட்டி கட்டுரை எழுதினார். கடைசி பத்தியில், 'அவர் நீதியரசர் என்பதால் எழுதுகிறேன் என்பார்கள். ஆனால், அவரது மாணவர் பருவத்திலிருந்தே எங்களை எதிர்த்துதான் வந்துள்ளார்' என்று குறிப்பிட்டுள்ளார். முடியாத சூழலில்கூட எனது புத்தகத்தைப் படித்துவிட்டு விமர்சனம் எழுதியிருந்தார். அதேபோல், 'கோயில்களில் பெண்கள் பூஜை செய்யலாம்' என்று நான் வழங்கியிருந்த தீர்ப்புக்கு, 'மாணவர் பருவத்திலிருந்தே அந்த நீதிபதி ஒரு சீர்திருத்தவாதி' என்று பாராட்டினார். கலைஞரிடம் பிடித்ததே அவரது கூர்மையான நினைவாற்றல்தான்.

அறிவே ஆயுதம். அந்த அறிவாயுதம் படிப்பால், புத்தகத்தால்தான் வரும். அனைத்துவிதமான புத்தகங்களையும் படிக்கலாம். தென் மாவட்டங்களில் சாதிப்பிடிப்பு இருக்கிறது என்பதைவிட, எல்லா இடங்களிலும் படிக்காத முரட்டுத்தனமாக நடந்துகொள்கிறவர்கள் இருக்கிறார்கள். படிப்பவர்கள், வாழ்க்கையை புதுப்பித்துக்கொள்கிறார்கள். தென் மாவட்டங்களில் இதுபோன்ற நூலகங்கள் வரும்போது ஆயிரக்கணக்கானோர் படிக்க வாய்ப்புள்ளது.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை, ஜெயலலிதா குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்ற முயற்சித்தபோது தொடரப்பட்ட வழக்கில், தடையுத்தரவை நான்தான் கொடுத்தேன். அந்த நூலகத்துக்கு அப்போது என்னுடைய நன்கொடை அந்தத் தீர்ப்புதான்” என்று கூறி, நெகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார் நீதிபதி சந்துரு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com