

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள பி.ஆர். கவாய் வரும் நவம்பர் 23 ஆம் தேதி ஓய்வுபெற உள்ள உள்ளார். இவருக்கு பிறகு நாட்டின் 53 வது தலைமை நீதிபதியாக திரு.சூர்யா காந்த் பதவியேற்க உள்ளார். வரும் நவம்பர் 24 ஆம் தேதி, நாட்டின் தலைமை நீதிபதியாக பதவியேற்கும் இவர் மொத்தமாக 15 மாதங்கள் இந்தப் பதவியில் நீடிப்பார்.சூர்யா காந்த் தனது 65 வயதில் (பிப்ரவரி 9, 2027 அன்று) பதவியில் இருந்து ஓய்வு பெறுவார். ஹரியானாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த திரு.சூர்யா காந்த் , ஹரியானா மாநிலத்தில் இருந்து தலைமை நீதிபதி ஆகும் முதல் நபர் என்ற பெருமையை பெறுகிறார்.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வரும் நவம்பர் 23 ஆம் தேதி ஓய்வுபெற உள்ள நிலையில் அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைக்குமாறு பி.ஆர். கவாய்க்கு மத்திய சட்ட அமைச்சகம் அண்மையில் கடிதம் எழுதியது.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற மரபுப்படி தனக்கு பிறகு மூத்த நீதிபதியாக உள்ள சூர்ய காந்தின் பெயரை 53-வது தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பரிந்துரை செய்துள்ளார்.
பி.ஆர்.கவாயின் பரிந்துரையை ஏற்று சூரியகாந்தை புதிய தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்துள்ளார்.
பிறப்பு மற்றும் பள்ளிக்கல்வி:
சூரிய காந்த் பிப்ரவரி 10, 1962 அன்று ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் பெட்வார் என்ற சிறிய கிராமத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். அவர் தந்தை பள்ளி ஆசிரியராக கிராமத்தில் பணியாற்றினார்.கிராமப் பள்ளிகளில் தொடக்க கல்வியை பயின்ற அவர் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத ஹன்சி நகருக்கு செல்லும் போது தான், முதன் முதலாக நகரக்தையே பார்த்தார். அந்த அளவிற்கு அவரது சிறுவயது வாழ்க்கை கிராமப்புறத்தை தாண்டாமல் இருந்துள்ளது.
அதன் பின்னர் கல்லூரி படிப்புகளை அருகில் உள்ள நகரங்களில் படித்து முடித்தார். 1984 இல் மகரிஷி தயானந்த் பல்கலைக் கழகத்தில் எல்.எல்.பி பட்டம் பெற்றார். பின்னர் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் போதே, 2011 இல் குருக்ஷேத்ரா பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மூலம் சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
நீதிமன்ற பணிகள்:
முதன்முதலாக வழக்கறிஞராக ஹிசார் மாவட்ட நீதிமன்றத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் சண்டிகருக்குச் சென்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்றார்.
• 38 வயதிலேயே சூர்யா காந்த் ஹரியானாவின் இளைய அட்வகேட் ஜெனரலாக ஆனார்.
• 2004 ஆம் ஆண்டில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்றார்.
• 2018 அக்டோபர் 5, அன்று இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
• 2019 மே 24 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதியானார்.
சிறப்பு வாய்ந்த தீர்ப்புகள்:
நீதிபதி சூர்ய காந்த் சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கி நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார், அதே நேரம் மனிதாபிமானம் மற்றும் தேச நலன் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டுள்ளார்.
1. அரசாங்கம் அதன் மறு ஆய்வை முடிக்கும் வரை , காலனித்துவ கால தேசத்துரோகச் சட்டத்தை நிறுத்தி வைத்து , அந்த சட்டப்படி புதிய எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யக்கூடாது என்று உத்தரவிட்ட, வரலாற்று சிறப்புமிக்க அமர்வில் நீதிபதி சூரிய காந்த் உறுப்பினராக இருந்தார்.
2. மனிதாபிமான அடிப்படையில் சிறையில் உள்ள கைதிகள் , தங்கள் மனைவியைப் பார்க்கவும் , வம்ச விருத்திக்காக செயற்கை கருவூட்டல் செய்யும் உரிமை உள்ளதை வலியுறுத்தினார்.
3.மனைவியை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தண்டனையை வழங்கிய பின்னர் , குற்றவாளியின் மூத்த மகளுக்கு ஒரு கல்லூரியின் முதல்வரிடம் நேரில் பேசி இலவசக் கல்வியை பெற்று தந்தார்.
4 பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களைப் பகிரங்கப்படுத்த தேர்தல் ஆணையத்தை அவர் வலியுறுத்தினார்.
5.உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் உட்பட , வழக்கறிஞர் சங்கங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி சூரியகாந்த் உத்தரவிட்டார்.
