தமிழக போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் தொடர்பான 6-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடையும் பட்சத்தில் நாளை பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளனர்.
-இதுகுறித்து சிஐடியு தொழிற்சங்கத்தினர் தெரிவித்ததாவது:
தமிழக போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை 5 கட்டங்களாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது. ஆனால் இந்த பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படவில்லை.
அடுத்த கட்ட பேச்சுவார்த்தை குறித்து அறிவிப்பு வெளியாகாத நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கான நோட்டீஸை போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநர்களிடம் சிஐடியு தொழிற்சங்கத்தினர் வழங்கினர். ஆகஸ்ட் 3 அல்லது அதற்கு பிறகு வேலைநிறுத்தம் நடைபெறும் எனவும் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், நாளை சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக பயிற்சி மைய வளாகத்தில் நாளை காலை 11 மணி அளவில் 6-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று 67 தொழிற் சங்கங்களுக்கு போக்குவரத்து துறை சுற்றறிக்கை அனுப்பியது. இந்த 6-ம் கட்ட பேச்சுவார்த்தையிலும் தோல்வி ஏற்பட்டால் நாளை தமிழகம் முழுவதும் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கப்படும்.
-இவ்வாறு சிஐடியு தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் நாளை பேருந்துகள் இயக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.