‘யங் இந்தியா’-வுக்கு சீல் வைப்பு: காங்கிரஸ் குமுறல்! 

‘யங் இந்தியா’-வுக்கு சீல் வைப்பு: காங்கிரஸ் குமுறல்! 
Published on

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள 'யங் இந்தியா' அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை சீல் வைத்தது. அதை எதிர்த்து இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.பிக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.  

நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பங்குகளை முறைகேடாக விற்றதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது குற்றம்சாட்டப்பட்டு அமலாக்கத்துறை சார்பில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. சோனியா கந்தி இருமுறை இந்த விசாரணைக்கு ஆஜரான நிலையில் டெல்லியில் உள்ள 'நேஷனல் ஹெரால்டு' தலைமை அலுவலகத்தில் செவ்வாயன்று (ஆகஸ்ட் 2) அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.  

இந்நிலையில், ஹெரால்டு ஹவுசில் உள்ள 'யங் இந்தியா' அலுவலகத்தை பூட்டி அமலாக்கத்துறையினர் சீல் வைத்தனர். இந்நிறுவனத்தின் இயக்குனர்களாக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.  

'யங் இந்தியா' நிறுவனத்தை பூட்டி சீல் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபடக் கூடும் என்பதால், அக்கட்சியின் தலைமை அலுவலகம் மற்றும் சோனியா இல்லம் அமைந்துள்ள ஜன்பத் பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: 

நாட்டில் விலைவாசி அதிகரித்து விட்டது குறித்தும் பெட்ரோல், டீசல், விலைவாசி உயர்வு குறித்தும் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்புவதால், எங்களை முடக்கும் வகையில் மத்திய அரசு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுகிறது. 

–இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.  

இந்நிலையில், இன்று காலையில் காங்கிரஸ் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் கூடி, அக்கட்சியின் அடுத்தகட்ட நகர்வு குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com