டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரான சைரஸ் மிஸ்திரி குஜராத்திலிருந்து நேற்று மும்பைக்கு காரில் வரும் போது விபத்தில் பலியானார். அதிவேகமாக சென்ற காரில் சைரஸ் மிஸ்திரி சீட் பெல்ட் அணியாமல் பயணித்ததாலேயே அவர் உயிரிழக்க நேர்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் நேற்று உயிரிழந்தார்.குஜராத்தில் இருந்து மும்பைக்கு காரில் பயணம் மேற்கொண்ட போது ஏற்பட்ட விபத்தில் அவர் உயிர் பிரிந்தது. அதேபோல் கார் டிரைவர் உட்பட இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த மிஸ்திரியின் உடல் குஜராத்தில் இருக்கும் காசா கிராமப்புற மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை சைரஸ் மிஸ்திரி பதவி வகித்தார்.
இதையடுத்து டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் பதவியிலிருந்து மிஸ்திரியை நீக்க 2016 ஆம் ஆண்டு வாக்களிக்கப்பட்ட நிலையில் அவர் தனது பதவியிலிருந்து விலகினார்.
இந்நிலையில் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி உயிரிழப்பு தொடர்பாக விரிவான விசாரணை நடத்த மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.
காரின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த சைரஸ் மிஸ்திரி சீட் பெல்ட் அணியவில்லை எனவும் முன் இருக்கையில் இருந்த இருவரும் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.