தமிழக அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வி சேரும் மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 7-ம் தேதி ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிட்டதாவது;
திட்டத்திற்காக ரூ.698 கோடியை தமிழக அரசு நிதியாக ஒதுக்கியுள்ளது. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு, மாதம் ரூ. 1000 வழங்கும் திட்டத்திற்காக ரூ.698 கோடியை தமிழக அரசு நிதியாக ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், சான்றிதழ் படிப்பு / பட்டயப்படிப்பு / பட்டப்படிப்பு / தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை, மாதம் ரூ.1,000 அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம். இந்நிலையில் இத்திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி, மாணவிகள் கல்லூரி மேற்படிப்பை தொடர்கின்றனரா என்பதை ஒவ்வொரு ஆறு மாதமும் உயர்கல்வித்துறை சார்பில் உறுதி செய்ய வேண்டும். மாணவிகளின் வங்கி கணக்கில் ஒவ்வொரு மாதமும் 7ஆம் தேதி ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும். இத்திட்டத்திற்காக நடப்பாண்டுக்கு மட்டும் 698 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, மற்றும் இத்திட்டத்தின்படி ஒரு ஆண்டுக்கு 6 லட்சம் மாணவிகள் பயனடைவர் என எதிர்பார்க்கப் படுகிறது.