3-ம் பாலினத்தவருக்கு வேலை வாய்ப்பு; உச்சநீதிமன்றம் உத்தரவு!

3-ம் பாலினத்தவருக்கு வேலை வாய்ப்பு; உச்சநீதிமன்றம் உத்தரவு!
Published on

நாட்டில் 3-ம் பாலினத்தவர்களுக்கு பாகுபாடு இல்லாத வேலை வாய்ப்பை வழங்க புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பாகுபாடு இல்லாமல் வேலை வாய்ப்பை வழங்குவது குறித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குங்கள் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது.

மேலும், அடுத்த மூன்று மாதத்தில் அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனை நடத்தி வழிகாட்டு நெறிமுறைகளை தயாரித்து சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்தில் விமான பணிப்பெண் பணிக்கு ஷானவி என்ற திருநங்கை விண்ணப்பித்திருந்தார்.அவருக்கு பணி தொடர்பான எந்த அறிவிப்பையும் ஏர் இந்தியா நிறுவனம் கொடுக்காததால், திருநங்கை ஷானவி உச்சநீதிமன்றத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த நிலையில் இன்று உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அதில் எர் இந்தியா நிறுவனத்தில் ஏர்ஹோஸ்டர்ஸ் பணிக்கு திருநங்கைகளுக்கு என தனியாக எந்த பிரிவும் இல்லை என பதிலளித்தது.

இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையில், உச்சநீதிமன்ற  நீதிபதி சந்திரசூட் தெரிவித்ததாவது;

நாட்டில் மூன்றாம் பாலினமான திருநங்கைகளுக்கு பாகுபாடு இல்லாமல் வேலை வாய்ப்பை வழங்குவது குறித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு உருவாக்க வேண்டும்.

இதுதொடர்பாக மூன்று மாதத்தில் அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனை நடத்தி வழிகாட்டு நெறிமுறைகளை தயாரித்து மத்திய அரசு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் 3-ம் பாலினத்தவர்க்கு வேலை வாய்ப்பை வழங்கும் வகையில் புதிய சட்டத்தை இயற்றலாம்.

-இவ்வாறு நீதிபதி சந்திரசூட் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து இந்த வழக்கு டிசம்பர் மாதம் முதல் வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com