சென்னையில் உணவுத் திருவிழா: இன்று தொடக்கம்!

சென்னையில் உணவுத் திருவிழா: இன்று தொடக்கம்!

சென்னை தீவுத் திடலில் தமிழக அரசு நடத்தும் 3 நாள் உணவுத் திருவிழா இன்று தொடங்கியது.

தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை, ஈட் ரைட் இந்தியா இயக்கத்துடன் இணைந்து நடத்தும் இவ்விழாவில், நிறைவு நாளில் விழிப்புணர்வு நடைப்பயணமும் நடைபெறவுள்ளது.

– இது குறித்து இந்த உணவுத் திருவிழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்ததாவது:

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மற்றும் தமிழக அரசு இணைந்து இத்திருவிழாவை நடத்துகிறது. இந்த 'சிங்கார சென்னை உணவுத் திருவிழா'வில்  கலாச்சார நிகழ்வுகளும் இடம் பெறும். இவ்விழாவில் மாநிலம் முழுவதும் உள்ள நாட்டுப்புற கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.

மேலும் இதில் மகளிர் சுயஉதவி குழுக்களின் சமையல் திறனை வெளிப்படுத்தும் விதமாகவும் அமையும். இந்த உணவுத் திருவிழாவில் ராகி புட்டு முதல் முடக்கத்தான் தோசை வரை நமது பாரம்பரிய உணவு வகைகள் கிடைக்கும். உணவுத் திருவிழா நடக்கும்  மூன்று நாட்களும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.

இதற்கு முன் 2019-ல் 'மதராசப்பட்டினம் உணவுத் திருவிழா' என்ற தலைப்பில் இதேபோன்ற உணவுத் திருவிழாவை ஏற்பாடு செய்திருந்தோம். இந்த திருவிழாவில் 90 சதவீதம் நமது பாரம்பரிய உணவு கண்காட்சி போல இருக்கும்.

இனி, மாவட்டங்கள் தோறும் இதே போன்ற உணவுத் திருவிழாக்களை நடத்த திட்டமிட்டுள்ளோம். இம்முறை சென்னை தீவுத் திடலில் சுமார் 150 ஸ்டால்கள் அமைக்கப்படவுள்ளன. மகளிர் சுயஉதவி குழுக்களுக்காக சுமார் 10 ஸ்டால்கள் வைக்க திட்டமிட்டுள்ளோம். பல முக்கிய பிரமுகர்கள் உணவுத் திருவிழாவின் ஒரு பகுதியாக இருப்பார்கள்.

-இவ்வாறு தெரிவித்தனர்.

இந்த உணவுத் திருவிழாவில் குழந்தைகள் தங்கள் சமையல் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு அளிக்கப்படுவார்களாம்.  இத்திருவிழாவுக்குச் செல்ல பார்வையாளர்களுக்கு நுழைவுக் கட்டணம்  ஏதுமில்லை. மேலும் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா உட்பட அனைத்து பிரபலமான உணவகங்களின் ஸ்டால்களும் இந்த உணவுத் திருவிழாவில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது..

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com