நாட்டிலேயே முதல்முறையாக ஜம்மு-காஷ்மீரின் பழங்குடியினத்தவரான குர்ஜார் முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த குலாம் அலி என்பவரை மாநிலங்களவை நியமன எம்.பி.யாக மத்திய அரசு நியமித்துள்ளது பெரும் வரவேற்பை் பெற்றுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் மத்திய அரசு ரத்து செய்ததையடுத்து,அம்மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.
இதில் சட்டப்பேரவையுடன் கூடிய காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பெரும்பான்மையாக பழங்குடி இனத்தைச் சேர்ந்த குர்ஜார், மக்கள் உள்ளனர். இந்நிலையில்,அப்பிரிவைச் சேர்ந்த குலாம் அலி என்பவரை மாநிலங்களவை எம்.பி-யாக பிஜேபி அரசு நியமனம் செய்துள்ளது.
-இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில் குறிப்பிட்டதாவது;
இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், காலியாக உள்ள மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவிக்கு குலாம் அலியை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. காஷ்மீரில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடை பெறவுள்ள நிலையில் இந்த நியமனம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.