ராணி எலிசபெத் இறுதிச் சடங்கு; உலகத் தலைவர்களுக்கு நிபந்தனை!

ராணி எலிசபெத் இறுதிச் சடங்கு; உலகத் தலைவர்களுக்கு நிபந்தனை!
Published on

ராணி இரண்டாம் எலிசபெத் இறுதி சடங்கில் பங்கேற்பதற்கு உலக நாடுகளின் தலைவர்களுக்கு இங்கிலாந்து அரசு கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது.

இங்கிலாந்து நாட்டை கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த ராணி 2-ம் எலிசபெத் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தார்.

இவரது இறுதி சடங்கு வரும் 19ம் தேதி லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் நடைபெற உள்ளது. அரச குடும்பத்தினர் மரியாதை செலுத்துவதற்காக எடின்பர்க்கில் உள்ள ஹோலிரூட்ஹவுஸ் அரண்மனையில் நேற்று உடல் வைக்கப்பட்டிருந்தது.

அவரது இறுதி சடங்கில் பங்கேற்க வரும் உலக நாடுகளின் தலைவர்களுக்கு அந்நாட்டின் வெளிநாட்டு மற்றும் பொதுநல மேம்பாட்டு அலுவலகம் கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது.

-இதுதொடர்பாக இங்கிலாந்து அரசு மற்ற நாடுகளின் தூதரகங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது;

இங்கிலாந்து ராணிக்கு அஞ்சலி செலுத்த வரும் பிற நாட்டு தனி விமானங்கள், ஹெலிகாப்டர்களில் வருவதை தவிர்த்து பயணிகள் விமானத்தில் வரும்படி கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.

* வெஸ்ட்மின்ஸ்டர் அபே வரும்போது தங்களது அரசுக்கு சொந்தமான கார்களில் வராமல், மேற்கு லண்டனில் இருந்து பேருந்தில் வர வேண்டும்.
* இறுதி சடங்கு மற்றும் அது தொடர்பான நிகழ்வுகளில் இட நெருக்கடி ஏற்படுவதை தவிர்க்க, நாட்டின் மூத்த பிரதிநிதி மற்றும் அவரது மனைவிக்கு மட்டுமே இடம் ஒதுக்கப்பட உள்ளது.
* முதன்மை அரசு விருந்தினர் குடும்பத்தினர், ஊழியர்கள் அல்லது குழுக்களுக்கு அனுமதி கிடையாது.
*இந்த அஞ்சலி நிகழ்வில்  பங்கேற்க முடியாத தலைவர்கள் தங்களது அரசின் அதிகாரப்பூர்வ பிரதிநிதியாக மூத்த அமைச்சர்களை அனுப்பலாம்.
* ராணியின் இறுதி சடங்கில் பங்கேற்க வரும் தலைவர்களுக்கு  மன்னர் 3-ம் சார்லஸ் பக்கிங்ஹாம் அரண்மனையில் விருந்தளிப்பார்.

-இவ்வாறு குறிப்பிடப் பட்டுள்ளது.

இந்நிலையில் மன்னர் 3-ம் சார்லஸ் தனது தாயின் இறுதி சடங்கு ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக லண்டனில் இருந்து நேற்று ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பர்க் வந்தார்.

ராணியின் உடல் அடக்கத்துக்காக பேராலயம் கொண்டு செல்லப்படும் முன் ஒரு நாள் முழுவதும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக எடின்பர்க் அரண்மனையில் வைக்கப்பட உள்ளது.

இதற்கிடையே, இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ்ஸின் அலுவலக செய்தி தொடர்பாளர், "ராணியின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஞாயிறு இரவு 8 மணிக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்படும்," என தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com