மகாராஷ்டிரா மாநிலம் கொண்டியா பகுதியில் பயணிகள் ரெயிலும், சரக்கு ரெயிலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 50 பேர் காயமடைந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பிலாஸ்பூரிலிருந்து பயணிகள் ரயில் ராஜஸ்தானிலுள்ள ஜோதிப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.அந்த ரயில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் மகாராஷ்டிராவில் கொண்டியா என்று ஊருக்கு வரும்போது, எதிர்பாராத விதமாக அதே தண்டவாளத்தில் விரைவாக வந்த சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
– இது குறித்து மகாராஷ்டிர ரயில்வே காவல் துறையினர் கூறியதாவது:
இன்று அதிகாலை நடந்த இந்த விபத்தில், பயணிகள் ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டன. அதில் இருந்த சுமார் 50 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அதிவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது வரை உயிரிழப்பு நேரவில்லை.
இந்த விபத்து குறித்து அறிந்து விரைந்து வந்த காவல்துறையின் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிக்னல் கோளாறு காரணமாக, இரு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் வர நேர்ந்து, இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.