கள்ளக்குறிச்சி போராட்டம்: 329 பேர் கைது!

கள்ளக்குறிச்சி போராட்டம்: 329 பேர் கைது!
Published on

கள்ளக்குறிச்சியில் நேற்று ஏற்பட்ட போராட்டத்தில் 329 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தையடுத்த கனியாமூரில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஶ்ரீமதி பிளஸ் 2 மாணவி விடுதியில் தங்கிப் படித்து வந்தார். இந்நிலையில் அம்மாணவி கடந்த 13-ம் தேதி பள்ளி விடுதியின் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்ததால் சிறுமி உயிரிழந்துவிட்டதாக அவரது பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்தது.

மாணவி உடலில் காயங்கள் இருப்பதாகவும், அதனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி, அந்த மாணவியின் உடலை அவரது பெற்றோர் வாங்க மறுத்தனர். மேலும் அவருக்கு ஆதரவாக கடந்த 5 நாட்களாக பள்ளியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்

இந்நிலையில் மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் உடலில் காயங்கள் இருந்ததாகவும், அவரது கை,கால்கள் உடைந்து எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று இந்த விவகாரம் தொடர்பான  இளைஞர்களின் போராட்டம் கலவரமாக மாறியது. பள்ளிக்குள் நுழைந்து சூறையாடிய வன்முறை கும்பல், அங்கிருந்த பேருந்துகள், போலீஸாரின் பைக்குகளை தீவைத்து எரித்தது. கல்வீச்சு தாக்குதலில் போலீஸார் காயமடைந்தனர். இதையடுத்து போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அங்கு 144 தடையுத்தரவு போடப்பட்டது.

நேற்று மாலை தமிழக உள்துறை செயலாளர் பணீந்தரரெட்டி மற்றும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டனர். 

இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் நேற்று ஏற்பட்ட போராட்டத்தில் 329 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்று காவல்துறை தெரிவித்துள்ளது  இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே பள்ளியின் முதல்வர், செயலர் மற்றும் தாளாளர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com