தமிழகத்தில் நேற்று தன்னிசையாக விடுமுறை அறிவித்த சுமார் 987 தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு, தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
-இதுகுறித்து தமிழக மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்ததாவது:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் தனியார் மெட்ரிக் பள்ளியில் ப்ளஸ்-டூ மாணவி ஶ்ரீமதி உயிரிழந்த விவகாரம் கலவரமாக வெடித்தது. இதையடுத்து அப்பள்ளியின் சொத்துக்களும் பேருந்துகளும் தீக்கிரையாக்கப்பட்டன.
அப்பள்ளியில் பயின்ற சுமார் 3 ஆயிரம் மாணவர்களின் கல்விச் சான்றிதழ்கள் கிழித்து எறியப்பட்டன. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றம் சில அதிரடி கேள்விகளையும் உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் இந்தக் கலவரத்தைக் கண்டித்து தமிழகத்தில் அனைத்து மெட்ரிக் பள்ளிகளும் விடுமுறை விடப்படும் என்று தமிழக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. ஆனால் முன்னறிவிப்பின்றி விடுமுறை அறிவித்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதையும் மீறி நேற்று தமிழகம் முழுவதும் சுமார் 987 தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதற்கு விளக்கம் கேட்டு இப்பள்ளிகளுக்கு தமிழக மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் இந்த 987 பள்ளிகள் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
-இவ்வாறு தமிழக மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.