தமிழகத்தில் வரும் நாட்களில் முக்கிய விழாக்கள், பண்டிகைகள் வரவிருப்பதால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும் வகையில், காவலர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்களை உஷாராக இருக்கும்படி டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டதாவது;
தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் முக்கிய விழாக்கள், பண்டிகைகள், சாதி– மதத் தலைவர்களின் பிறந்த நாட்கள் மற்றும் நினைவு நாட்கள் வர உள்ளதால் மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தவிர்க்க வேண்டும்.
எனவே, ஆயுதப்படை காவலர்கள் மற்றும் சட்டம்–ஒழுங்கு பிரிவில் உள்ள இளம் காவலர்களுக்கும் ஒவ்வொரு வாரமும் 2 அல்லது 3 கவாத்து பயிற்சி வழங்க வேண்டும். ஆயுதப் படையில் துணை கண்காணிப்பாளர் முதல் ஆய்வாளர்கள் வரையில் உள்ளவர்களுக்கு கலவர சம்பவங்களில் படையை வழிநடத்துவதற்கு உரிய பயிற்சிகள் அளிக்க வேண்டும்.
மேலும் கலவரத்தை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் வஜ்ரா, வருள் மற்றும் இதர வாகனங்களை முறையாகப் பராமரித்து தயார் நிலையில் வைக்க வேண்டும். ஆயுதப் படை காவலர்களை தயார் நிலையில் வைத்து, அவசரகாலப் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.