கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி இம்மாதம் 27-ம் தேதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கிப் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்ததையடுத்து, அங்கு பெரும் கலவரம் வெடித்தது. பள்ளி தீக்கிரையானது.
அம்மாணவியின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கையானது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தன் மகளின் மரணத்திற்கு நீதி கோரி நடைபயணம் மேற்கொள்ளப் போவதாக ஶ்ரீமதியின் பெற்றோர் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் வருகின்ற சனிக்கிழமை காலை 10 மணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை ஸ்ரீமதியின் தாயார் செல்வி சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
–இதுகுறித்து தலைமைச் செயலக வட்டாரத்தில் தெரிவித்ததாவது:
முதல்வர் ஸ்டாலின் கோவையில் தனது 3 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துகொண்டு சென்னை திரும்பிய பின்னர், 27-ம் தேதி ஶ்ரீமதியின் தாய் செல்வியை சந்திக்க உள்ளார்.
–இவ்வாறு தெரிவிக்கப்பட்டன. இந்நிலையில் ஸ்ரீமதியின் தாயாருக்கு அரசு வேலை வழங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், அதையடுத்து செல்வியின் நடைப்பயணம் திட்டம் ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.