சர்வதேச 44-வது செஸ் போட்டியின் தொடக்க விழா இன்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள நிலையில், இந்த விழாவை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார்.
-இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது:
சர்வதேச 44-வது செஸ் போட்டியின் தொடக்க விழாவுக்காக பிரதமர் மோடி இன்று பிற்பகல் 2.20 மணிக்கு அகமதாபாத்தில் இருந்து தனி விமானத்தில் கிளம்பி, மாலை 4.45 மணிக்கு சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் நேரில் சென்று பிரதமரை வரவேற்கின்றனர்.
பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக 5.45 மணிக்கு ஐஎன்எஸ் அடையாறு ராணுவ தளத்துக்குச் சென்று அங்கிருந்து கார் மூலம் 6 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு பிரதமர் செல்கிறார். அங்கு விழா முடிவில் இரவு 8 மணியளவில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் செல்கிறார்.
பின்னர் நாளை காலை 9.50 மணிக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் 42-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு 69 பேருக்கு தங்கப் பதக்கம் மற்றும் பட்டங்களை வழங்கி உரை நிகழ்த்துகிறார். பின்னர் நாளை காலை 12 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் அகமதாபாத்துக்கு செல்கிறார்.
–இவ்வாறு பிரதமரின் நிகழ்ச்சி நிரல் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சென்னை மாமல்லபுரத்தில் இன்று முதல்ஆகஸ்ட் 10-ம் தேதி வரை 44-வது செஸ் போட்டி நடைபெறவுள்ள சர்வதேச ஒலிம்பியாட் போட்டிகளில் 189 நாடுகளைச் சேர்ந்த, 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் வருகையையொட்டி பாதுகாப்புகள் ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளன. விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. மேலும் சென்னை காவல் ஆணையர் தலைமையில், 4 கூடுதல் ஆணையர்கள், 7 இணை ஆணையர்கள் மற்றும் துணை ஆணையர்கள் உட்பட சுமார் 22 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.