#JUST IN : அடிமட்ட தொண்டர் ஒருவர் உயர்பதவிக்கு வர முடியும் என்பதால் அதிமுகவை தேர்வு செய்தேன் - காளியம்மாள் பேட்டி..!

kaaliammal joins admk
kaaliammal joins admk
Published on

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் பல்வேறு அரசியல் பிரபலங்கள் கட்சி மாறும் காட்சிகள் அவ்வப்போது அரங்கேறி மக்களுக்கு ஆச்சரியம் தருகிறது. அந்த வகையில் தற்போது நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியிருக்கும் பிரபல பேச்சாளர் காளியம்மாள் இன்று சென்னையில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

காளியம்மாள் பிரகாசன் (Kaliyammal Prakasan) நாம் தமிழர் கட்சியின் முன்னாள் முக்கிய பெண் நிர்வாகி மற்றும் பேச்சாளர்களில் ஒருவர். அவர் தீவிரமான அரசியல் பேச்சுகளால் அறியப்பட்டவர். பட்டப்படிப்பு முடித்துள்ள காளியம்மாள் பிரகாசன் தமிழ் தேசியம் சார்ந்த கருத்துகளை வலியுறுத்தி அரசியல் அடையாளம் பெற்றவர்.

தனது கருத்துகளுடன் ஒத்து வந்த நாம் தமிழர் கட்சியை தேர்ந்தெடுத்து அரசியல் பயணத்தை துவங்கி அக்கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக கடந்த 6 ஆண்டுகள் செயல்பட்டவர். குறிப்பாக கட்சியின் முக்கிய பெண் முகங்களில் ஒருவராகவும் நாம் தமிழர் கட்சியை தனது தெளிவான பேச்சுகளின் மூலம் மக்களிடம் அறியவைத்த பங்கு இவருக்கும் உண்டு என்கின்றனர்.

கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் நாதக சார்பில் மயிலாடுதுறையில் போட்டியிட்டு சுமார் 1,27,642 வாக்குகள் பெற்று தன் பலத்தை நிரூபித்தவர்.

தனது மேடை பேச்சுகளில் தீவிரமான தமிழ் தேசிய கருத்துகளை வலியுறுத்தி பெண்கள் மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்து பேசிய இவர் கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் சில கட்சி நிர்வாகிகளின் நடத்தை மற்றும் உள்ளக அரசியல் காரணமாக காளியம்மாள் மனஅழுத்தத்தில் இருந்ததாகவும் தொடர்ந்து பிப்ரவரி 2025ல் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகினார்.

குறிப்பாக சீமான் பேசும் ஒரு ஆடியோ பதிவு (phone conversation) வெளியான பிறகு இருவருக்கும் இடையே பிரச்சினை அதிகரித்ததாகவும் அதன்பிறகு இருவருக்கும் சுமூகமான தொடர்பு இல்லை என்று கூறப்பட்டது.

அவர் தமிழக வெற்றி கழகத்தில் (TVK) கட்சியில் சேரலாம் என்ற தகவல்களும் அரசல் புரசலாக வெளியானது.

இந்நிலையில் சிறந்த பேச்சாளராகவும் சமூக ஆர்வலராகவும் அறியப்பட்டு மக்கள் செல்வாக்கு பெற்ற காளியம்மாள் நாதக-வின் எதிரணியான அதிமுகவில் இணைந்துள்ளது அதிமுகவிற்கு கிடைத்த தேர்தல் பலமாகவே பார்க்கப்படுகிறது.

அதன் பின் செய்தியர்களிடம் பேசிய காளியம்மாள் "நாதகவில் செயல்படுவதற்கு முன்பு அதிமுகவின் ஏற்கனவே செயல்பட்டு உள்ளேன். அடிமட்ட தொண்டர் ஒருவர் உயர்பதவிக்கு வர முடியும் என்பதால் அதிமுகவை தேர்வு செய்தேன் .ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அரசியலில் செயல்பட உள்ளேன். விலைவாசி உயர்வால் தமிழக மக்கள் எண்ணற்ற பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். அதிமுக தலைமை வாய்ப்பு கொடுத்தால் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com