கன்னியாஸ்திரிகளின் சுயமரியாதையை புண்படுத்தும் வகையிலான “கக்குகளி” நாடகத்தை தடை செய்ய வேண்டும் என்று கேரள கத்தோலிக்க பிஷப் கவுன்சில் சனிக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளது.
கேசிபிசியின் துணைச் செயலாளர் ஃபாதர் ஜேக்கப் பலக்கப்பில்லி, அதன் தலைவர் கர்தினால் பாசிலியோஸ் க்ளீமிஸ் தலைமையில் நடைபெற்ற அமைப்பின் கூட்டம் நாடகத்தின் "கிறிஸ்தவ விரோத" உள்ளடக்கம் குறித்து கண்டனம் தெரிவித்ததாக ஒரு அறிக்கையில் தெரிவித்தார். இது கேரளத்தின் கலாச்சாரத்தை அவமதிக்கும் செயலாகும். இது கன்னியாஸ்திரிகளின் சுயமரியாதையையும், நம்பிக்கையையும் அவமதிக்கும் நாடகம், இப்படிப்பட்ட ஒரு நாடகமானது மாநில அரசின் சர்வதேச நாடக விழாவில் இடம் பெற்றிருப்பதும், அந்த நாடகத்திற்கு கம்யூனிஸ்ட் அமைப்புகள் பெரும் விளம்பரம் செய்வதும் மிகவும் வருந்தத்தக்கது. என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
“கக்குகளி” என்பது பிரான்சிஸ் நோரோனா எழுதிய அதே தலைப்பிலான மலையாளச் சிறுகதையொன்றின் நாடகத் தழுவலாகும். கே பி அஜயகுமார் திரைக்கதை அமைத்துள்ளார், இது ஆலப்புழாவை தளமாகக் கொண்ட நெய்தல் நாடக சங்கத்தால் நிகழ்த்தப்படுகிறது. கடலோர மீனவர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு கத்தோலிக்கப் பெண் துறவற இல்லத்தில் சேரும் கதையையும் அவள் மடாலய வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களையும் இந்த நாடகம் சொல்கிறது.
ஆளும் சிபிஐயின் இளைஞர் அமைப்பான ஏஐஒய்எஃப் இந்த நாடகத்திற்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது. நாடகம் தொடர்பான சர்ச்சை தேவையற்றது என்றும், கருத்துச் சுதந்திரத்தை மீறுவதற்கு மட்டுமே இது உதவும் என்றும் அந்த அமைப்பு திருச்சூரில் அறிக்கை வெளியிட்டது.
ஆனால், மதகுருமார்களுக்கு எதிரான ஆதாரமற்ற பிரச்சாரத்தை உள்ளடக்கிய இந்த நாடகத்தை கண்மூடித்தனமாக விளம்பரப்படுத்துவது ஆட்சேபனைக் குரியது என்று கேசிபிசி தெரிவித்துள்ளது. கேரளாவின் கலாச்சார அமைப்பு உண்மையை உணர்ந்து இந்த திரிபுபடுத்தப்பட்ட வேலைக்கு எதிராக எதிர்வினையாற்ற தயாராக இருக்க வேண்டும். இந்த நாடகத்தை தடை செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றும் கேசிபிசியின் துணைத்தலைவர் ஃபாதர் ஜேக்கப் கருத்து தெரிவித்துள்ளார்.
நாடகங்களும் இலக்கியப் படைப்புகளும் தெளிவான சமூகப் நோக்கம் கொண்டவையாக இருக்க வேண்டும் என்றும், அத்தகைய படைப்புகளே சீர்திருத்தம் மற்றும் சமூக எழுச்சிக்கு வழி வகுக்கின்றன என்றும் பிஷப்ஸ் அமைப்பு கூறியது. அதே நேரத்தில், "மிகவும் அவமதிக்கும் உள்ளடக்கம் மற்றும் வரலாற்றை சிதைக்கும்" படைப்புகள் மத நம்பிக்கைகளையும், அவற்றின் சேவைகளையும் கொச்சைப்படுத்துவதை அனுமதிக்க முடியாது. நாட்டில் உள்ள கன்னியாஸ்திரிகள் நலிந்த பிரிவினரையும், கைவிடப்பட்ட மக்களையும் கவனித்துக் கொண்ட பெருமையும் கனிவும் மிக்க வரலாற்றுப் பின்புலம் கொண்டுள்ளனர் என்றும் கேசிபிசி தெரிவித்துள்ளது.