நாடாளுமன்றத் தேர்தலை குறிவைத்து மகளிருக்கு 1000 ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. 1000 ரூபாய் கொடுத்து வாக்கை பெரும் முயற்சி பலிக்காது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் விடுத்துள்ள அறிக்கை, 2021 ல் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட 520 க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில், 99 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாகவும், மகளிர் உரிமைத் தொகை 1,000 ரூபாய் வழங்குவதன் மூலம் நூற்றுக்கு நூறு சதவீதம் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாகவும், முதலமைச்சர் கூறிவருகிறார். தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குவோம் என்று 2021 தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்து 28 மாதங்களாக தாய்மார்களை ஏங்க வைத்துவிட்டு இப்போது, பாதிக்கும் குறைவான மகளிருக்கு மட்டும் மாதம் 1,000 ரூபாயை வழங்கி உள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்க வேண்டும். ஆட்சிக்கு வந்து 28 மாதங்களாக மகளிர் உரிமைத் தொகையினை வழங்காமல் காலம் தாழ்த்திவிட்டு, தற்போது குறிப்பிட்ட மகளிருக்கு மட்டும் உரிமைத் தொகை வழங்குவதன் நோக்கம், விரைவில் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது ; அத்தேர்தலில் வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்று நினைப்பது முதலமைச்சருடைய நப்பாசை எண்ணம் தான்.
பெண்கள் மீது அக்கறை கொண்டு இந்த உரிமைத் தொகையை வழங்கவில்லை என்பதும், நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் மகளிரின் வாக்குகளைப் பெறுவதற்காகத்தான் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது என்பதும், மக்களுக்கு நன்றாகவே தெரியும். 28 மாத காலத்தில், இரண்டுமுறை உயர்த்தப்பட்ட மின் கட்டணம், சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம். மற்றும் பலமுறை உயர்த்தப்பட்ட பால் மற்றும் பால் பொருட்களின் விலை என்று அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் கடுமையாக விலை ஏற்றப்பட்டுள்ளது இன்று குற்றம் சாட்டியுள்ளார்.