கலைஞர் கருணாநிதியின் மனைவியும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தாயாருமான தயாளு அம்மாளுக்கு இன்று மாலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். பல்வேறு அரசுப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்த முதல்வர் ஸ்டாலின் செய்தி அறிந்து உடனே மருத்துவமனைக்குச் சென்று, தனது தாயாரின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.
சமீப காலமாகவே வயது மூப்பின் காரணமாக தயாளு அம்மாள் தனது கோபாலபுரம் வீட்டிலேயே ஓய்வில் இருந்து வருகிறார். அவருக்கு தற்போது 90 வயதாகிறது. முன்னதாக, கடந்த 12 நாட்களுக்கு முன்புதான தயாளு அம்மாள் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். இந்த விழாவில் தமிழக முதல்வர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர். குறிப்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரி ஆகியோர் தங்களின் தாயார் தயாளு அம்மாள் மீது அதிக பாசம் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்தான் இன்று முதல்வர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் சென்னையில் நடந்த முத்தமிழ் பேரவையின் 42ம் ஆண்டு இசை விழாவில் பங்கேற்று இருந்தார். தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்த தகவல் கிடைத்தவுடன் முதல்வர் ஸ்டாலின் உடனே மருத்துவமனைக்கு விரைந்து வந்தார்.
தயாளு அம்மாள் உடல் நிலை குறித்து பேசிய அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், ‘உணவு ஒவ்வாமையால் அவருக்கு உடல் நலப் பிரச்னை ஏற்பட்டு இருப்பதாகவும் அதனால்தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருக்கிறார் என்றும், அவருக்கு உண்டான சிகிக்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும்’ தெரிவித்து இருக்கின்றனர்.