
தமிழ்நாடு அரசால் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலமாக பெண்கள் பொருளாதார சுதந்திரத்தை அடைந்துள்ளனர் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் மாநிலத் திட்டக் குழு கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.
இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியது, ”திட்டக்குழு மக்களுக்கும் அரசுக்கும் இடையேயான இடைவெளியை குறைக்கும் பாலமாக இருக்க வேண்டும். மேலும் திட்டக் குழுவுக்கு, மாநில அரசுக்கு அறிவுறுத்தல் வழங்கக்கூடிய பணியும் உள்ளது.
தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள காலை உணவு திட்டம் பாராட்டுக்களை பெற்றிருக்கிறது. நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 13 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இலவச பயணத் திட்டத்தின் மூலம் பெண்களுக்கான செலவு குறைந்துள்ளது.
தற்போது வழங்கப்பட்டுள்ள கலைஞர் உரிமைத்தொகை மூலம் பெண்கள் பொருளாதார சுதந்திரம் அடைந்துள்ளனர். அனைத்து தரப்பினர் மத்தியிலும் இது பெரிய அளவில் ஆதரவை பெற்றிருக்கிறது. குறிப்பாக சொல்லப் போனால் கிராமப்புறங்களில் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் மூலம் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது.
திட்டக் குழு அரசின் சார்பில் வழங்கப்படுகின்ற அனைத்து நலத்திட்டங்கள் குறித்தும் கண்காணிக்க வேண்டும். பொருளாதார நடவடிக்கைகளில் அடைய வேண்டிய இலக்கை நோக்கி பயணிக்க அரசுக்கு வழிகாட்டும் ஆலோசகராக திட்டக் குழு செயலாற்ற வேண்டும். மேலும் புள்ளி விவரங்களோடு நின்று விடாமல் கள ஆய்வுகளை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.