கலாஷேத்ரா நடன உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைது!

கலாஷேத்ரா  நடன உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைது!
Published on

கலாஷேத்ரா அறக்கட்டளையில் பாலியல் துன்புறுத்தல் இருந்ததாக முன்னாள் மாணவி அளித்த புகாரில் நடன உதவி பேராசிரியர் ஹரி பத்மனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக இக்கல்லூரியில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு தருவதாக பல்வேறு மாணவிகளின் புகார்கள் குவிந்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் கடிதம் அனுப்பியிருந்தனர். இந்த விவகாரத்தில் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இது குறித்து நடந்த விசாரணையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரி இயங்கி வருகிறது. நடனம் மற்றும் இசைக்கு புகழ்பெற்ற இந்த கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு இக்கல்லூரியில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு தருவதாக ஆசிரியர் ஒருவர் வெளியிட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவியது. இதையடுத்து தேசிய மகளிர் ஆணையம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டது.

மேலும் சென்னை, திருவான்மியூரில் செயல்பட்டு வரும் ருக்மணி தேவி கலை கல்லூரியில், கடந்த 2019-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர், கடந்த வெள்ளிக்கிழமை நடன உதவி பேராசிரியராக பணியாற்றிய ஹரி பத்மன் என்பவர் மீது காவல்நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார்.

இந்நிலையில், அடையாறு மகளிர் போலீசார், உதவி பேராசிரியர் ஹரிபத்மன் மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்று ஹரி பத்மனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com