கல்குவாரி வேலை நிறுத்தம் எதிரொலி: தமிழகம் முழுவதும் கட்டட பணிகள் பாதிப்பு!

கல்குவாரி வேலை நிறுத்தம் எதிரொலி: தமிழகம் முழுவதும் கட்டட பணிகள் பாதிப்பு!
Published on

கல்குவாரி, மணல் மற்றும் லாரி உரிமையாளர்களின் போராட்டம் தொடர்நது வருவதால் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும கட்டடப் பணிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஐந்தாவது நாளாக தொடரும் போராட்டத்தில், தமிழக அரசு தலையிட்டு சமூக பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை தீர்க்கவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன.

தமிழகம் முழுவதும் 7000 கல்குவாரிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. சமீபமாக கல்குவாரி செயல்பாட்டுக்கு பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாக உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். சாலை, கட்டடப் பணிகளுக்காக பயன்படுப்படும் சிறு கற்களை பயன்படுத்த தடை ஏற்பட்டதன் காரணமாக அதை எதிர்த்து போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். திடீரென்று எழுந்துள்ள கட்டுப்பாடுகள்தான் அவர்களை கவலைக்குள்ளாக்கியிருக்கிறது.

2016-ம் ஆண்டு முதல் நடை முறையில் உள்ள சிறு கனிம விதிகளை பெரும் கனிம விதிகளுடன் சேர்த்தது தங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், முறையான சோதனைகளுக்கு பின்னரும் கல் குவாரிகளை இயங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள். அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு அனுமதி வழங்கிய நிலையிலும் தனிநபர் புகாரின் பேரில் குவாரியை இயங்க செய்யவிடவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

சுற்றுச்சூழல் ஆர்வலர் என்ற பெயரில் பணம் பறிக்கும் நோக்கத்தில் சிலர் கல் குவாரி தொழிலை நடத்த விடாமல் செய்பவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை முன் வைக்கிறார்கள். அதே நேரத்தில் கல்குவாரிகளுக்கு அபராதம் விதிக்கும் அதிரடி நடவடிக்கைகளால் கல்குவாரி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரிகிறது.

தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழ்நாடு கல்குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் மற்றும் கிரசர் மணல் குவாரிகள் பங்கேற்றுள்ளார்கள். பெரும்பாலான இடங்களில் லாரிகளை ஒரே இடத்தில் நிறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக தமிழகம் முழுவதும் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. கட்டுமான பணிகள் சார்ந்த தொழிலாளர்களுக்கும் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. வட மாநில தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு திரும்ப ஆரம்பித்திருக்கிறார்கள். வேலை நிறுத்தத்தின் காரணமாக

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் 1300 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக ரியல் எஸ்டேட் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com