கள்ளச்சாராய மரணங்கள்: தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு ஆளுநர் கடிதம்!

கள்ளச்சாராய மரணங்கள்: தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு ஆளுநர் கடிதம்!
Published on

சமீபத்திய கள்ளச்சாராய சாவுகள், தமிழக அரசின் காவல்துறை மற்றும் மதுவிலக்கு அமலாக்குத்துறை ஆகியவை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியிருக்கிறார். கள்ளச்சாராயம் தொடர்பான சம்பவங்களை முன்வைத்து தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும், பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் அறிக்கை விடுத்துள்ள நிலையில் ஆளுநரும் விளக்கம் கேட்டிருப்பதால் கோட்டை வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

மூன்று நாட்கள் முன்பு, சென்னையைச் சுற்றியுள்ள விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 70க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய தடுப்பு தொடர்பான கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன. கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களி, விநியோகிப்பவர்கள், உடந்தையாக இருப்பவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடப்பட்டிருக்கிறது. கள்ளச்சாராயத்தை தடுக்க மாவட்ட அளவில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையும் ஆய்வுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

பொதுமக்கள் மத்தியில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கள்ளச்சாராய பயன்பாடுகள் குறித்து தகவலளிக்கவும் 10581 என்ற எண்ணும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரிகளை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இது தவிர மாவட்டரீதியாகவும் கள்ளச்சாராயம், போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவ்டடத்தில் கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள் விற்பனையில் இருந்தால் 9042469405 என்னும் வாட்ஸ்-அப் எண்ணுக்கு தகவல் தெரிவிக்குமாறு விழுப்புரம் மாவட்ட காவல்துறை, மதுவிலக்கு அமலாக்கத்துறை அறிவித்திருக்கிறது. இதுபோல் ஒவ்வொரு மாவட்டமும் வாட்ஸ்அப் எண்களை பொதுமக்களிடம் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் கள்ளச்சாராய சாவுகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் ஆய்வு செய்ய முடிவெடுத்திருப்பதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே நேற்று நடந்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக ஆளுநரை சந்தித்து மனு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com