
கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களுக்கு பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர். அடுத்தடுத்து கிடைத்த சினிமா வாய்ப்புகளை இறுக்கமாகப் பிடித்து, தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க காமெடியன்களில் ஒருவரானார்.
இவர் செய்யும் மிமிக்ரிக்கும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. சினிமாவில் நடிக்கத் தொடங்கிய இவருக்கு, மாரி' திரைப்படம் ப்ரேக் தந்தது.
இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட ரோபோ ஷங்கர் திடீரென்று மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.நேற்று மாலை அவரது உடல்நிலை பின்னடைவை சந்தித்த நிலையில், அவரை மருத்துவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றினர். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி ரோபோ சங்கர் உயிரிழந்தார்.
இந்த நிலையில் நடிகரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் ரோபோ ரோங்கர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரின் எக்ஸ் பதிவில்,
“ரோபோ சங்கர்
ரோபோ புனைப்பெயர் தான்
என் அகராதியில் நீ மனிதன்
ஆதலால் என் தம்பி
போதலால் மட்டும் எனை விட்டு
நீங்கி விடுவாயா நீ?
உன் வேலை நீ போனாய்
என் வேலை தங்கிவிட்டேன்.
நாளையை எமக்கென நீ விட்டுச்
சென்றதால்
நாளை நமதே”
என்று தெரிவித்துள்ளார்.