

இரண்டு உச்ச நடிகர்கள் இணைந்து நடிக்கும் திரைப்படங்களுக்கு எப்போதுமே மக்களுக்கு மத்தியில் அதிக மவுசு உண்டு. அது மாதிரி படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று , பெரிய வெற்றி பெற்ற திரைப்படமாக அமைகின்றன. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் 4 தசாப்தங்களுக்கு பிறகு இணைய போகும் திரைப்படம் ,அதிக எதிர்பார்ப்புகளை இப்போதே ஏற்படுத்தி வருகிறது.
40 வருடங்களுக்கு முன் ரஜினியின் கமலும் இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அப்போதைய காலகட்டங்களில், அவர்கள் இணைவதற்கு பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இருந்தது இல்லை. ரஜினி முதன்முதலில் திரையில் அறிமுகமான 'அபூர்வராகங்கள்' திரைப்படத்திலேயே கமலுடன் இணைந்து தான் நடித்தார். அப்போது ரஜினி ஒரு குணசித்திர நடிகராக அறிமுகமானார் , கமலோ வளர்ந்து வரும் நடிகராக இருந்தார். எம்ஜிஆரும் சிவாஜியும் அப்போதைய காலகட்டத்தில் மிக பிரம்மாண்டமான , கலர் படங்களில் நடித்துக் கொண்டிருந்தனர். ஆனால் , ரஜினியும் கமலும் குறிப்பிட்ட காலம் வரை மிகக் குறைந்த பட்ஜெட் , அதுவும் கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தனர்.
அதன் பின்னர் 'மூன்று முடிச்சு' மற்றும் 'பதினாறு வயதினிலே' திரைப்படங்களில் கமலுக்கு வில்லனாக ரஜினி மிரட்டியிருப்பார். இந்த காலக்கட்டத்தில் கன்னட திரைப்படங்களில் ரஜினிக்கு கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரங்கள் கிடைத்தது. கன்னட சூப்பர்ஸ்டார் விஷ்ணுவர்த்தனுடன் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். தமிழில் ரஜினி குணசித்திர வேடம் மற்றும் துணைக் கதாபாத்திரங்களுக்கு மாறிக் கொண்டிருந்த போது, 1978 இல் 'பைரவி' திரைப்படத்தின் மூலம் அவருக்கு கதாநாயகன் வேடம் கிடைத்தது.
அதன் பின்னரும் கமல் திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துக் கொண்டிருந்தார். 1980 களில் ரஜினி அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்தார் , கமலும் பல ஹிட்டுகளை கொடுக்க ஒருவருக்கு ஒருவர் போட்டியாளர் ஆனார்கள். ரஜினியின் 'தில்லு முல்லு' திரைப்படத்தில் கமல் கவுரவ வேடத்தில் இறுதிக் காட்சியில் நடித்திருப்பார். அதன் பின்னர் இருவரும் இணைந்து எந்த தமிழ் திரைப்படத்திலும் நடித்தது இல்லை. 1985 இல் அமிதாப் பச்சன் ,கமல் இணைந்து நடித்த 'கிராப்தார்' திரைப்படத்தில் ரஜினி சில காட்சிகளில் நடித்திருப்பார். ஆனால் , அந்த காட்சிகளில் கமலும் இணைந்து அவர் தோன்றவில்லை.
ரஜினியின் கமலும் பெரிய அந்தஸ்தை பெற்ற பிறகு இருவரும் இணைந்து நடிப்பது இல்லை. நீண்டகாலமாக தமிழ் சினிமாவில் இரண்டு நடிகரும் உச்சத்தில் இருப்பதால் எப்போது இவர்கள் இணைந்து நடிப்பார்கள் என்ற ஆர்வம் ரசிகர்களுக்கு இருந்தது. இருவரையும் திரைக்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் கே. பாலச்சந்தர் இவர்கள் இருவரையும் இணைத்து படம் எடுக்க ஆசைப்பட்டார்.
சமீபத்திய காலத்தில் ரஜினியின் திரைப்படங்களில் பல அண்டை மாநில பெரிய நடிகர்கள் சேர்ந்து நடித்து வருகின்றனர். ஜாக்கி ஷெராப் , மோகன்லால் , சிவராஜ் குமார் , உபேந்திரா, நாகார்ஜூனா போன்றோருடன் ரஜினி நடித்துள்ளார். கமலும் அமிதாப் பச்சன் மற்றும் பிரபாஸ் நடிக்கும் கல்கி திரைப்படத்தில் பாகங்களில் நடித்து வருகிறார். இதனால் ரஜினி கமல் இருவரையும் இணைத்து ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்று பல இயக்குனர்கள் பேசி வந்தனர்.
இந்நிலையில் ரஜினியும் கமலும் இணைந்து சுந்தர்.சியின் இயக்கத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. அதன் பின்னர் அந்த திட்டம் கைவிடப்பட்டது. தற்போது ரஜினி கமல் இணைந்து நடிக்கும் படத்தினை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார் , அனிருத் இசையமைக்கிறார் என்று ரெட் ஜெயன்ட் மூவிஸ் அறிவித்துள்ளது. இன்று பிற்பகல் 12:07 மணிக்கு ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுக்க தியேட்டர்களில் இந்த ப்ரோமோ வீடியோ இன்று வெளியானது. அதில் முதலில் இயக்குனர் நெல்சனும் அனிருத்தும் தோன்றுகிறார்கள். அனிருத் கோகில பிரியா அல்லது சண்முகப்பிரியா எந்த ரகத்தில் நான் இசையமைக்க வேண்டும் என்று நெல்சன் இடம் கேட்கிறார். அதற்கு நெல்சன் நக்கலாக இதெல்லாம் உனக்கு தெரியுமா? என்று கேட்கிறார்.
அடுத்த காட்சியில் நெல்சன் கமலுக்காக தேர்ந்தெடுத்த கோட் ,வாட்ச், பெல்ட் , கூலிங் கிளாஸ் தவிர்த்து கமல் தனக்கு விருப்பமானதை தேர்ந்தெடுத்துக் கொள்கிறார். அடுத்த நொடியே ஸ்டைலாக ரஜினியும் தோன்றுகிறார். இருவரும் பழைய கிளாசிக் கார்கள் உள்ள கேரேஜ் ஒன்றுக்கு செல்கின்றன. ரஜினியின் கமலும் பழைய பென்ஸ் கார் ஒன்றில் ஏறி அமர்கின்றனர். பின் சீட்டில் அமர்ந்துள்ள அனிருத் "சார்ஸ், பீத்தோவனும் பப்பி லஹரியும் , சேர்ந்து போட்ட மாதிரி தீம் மியூசிக் போட்டு இருக்கிறேன் கேட்கிறீர்களா? என்று கேட்கிறார்.
அதற்கு கமல் " அதுக்கு முன்னாடி ஒன்னு கேட்கணும் யார் ஹீரோ? என்கிறார்.
ரஜினியோ " கேக்குறாங்க இல்ல சொல்லுங்க ஜி யார் ஹீரோ? என்று மிரட்டலாக கேட்கிறார்.
கமல் காரை கிளப்ப பெரும் புகையோடு கார் செல்கிறது..