அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஏ. ஆர். ரஹ்மான் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக பரப்புரை செய்யவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆகையால், பிரச்சாரமும், தேர்தல் பணிகளும் சூடுபிடித்துள்ளது. அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதே அந்த நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வேட்பாளராக மீண்டும் களமிறங்கவிருந்த நிலையில், அவர் சில காலத்திற்கு முன்னர், போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்தார்.
ஜோ பைடனுக்கு ஏற்கனவே சொந்த கட்சியில் பல எதிர்ப்புகள் இருந்தன. ஆகையால், அவரை இம்முறை போட்டியிட விடக்கூடாது என்று கட்சிக்காரர்களே எதிர்த்தனர். ஆனாலும், அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன் என்று திடமாக இருந்து வந்தார். சில நாட்களுக்கு பின்னர் அவரது குடும்பத்தினரும் போட்டியிலிருந்து விலக கூறினர். ஆகையால் இவர் போட்டியிடப்போவதில்லை என்று கூறிவிட்டார். இதனால், அவருக்கு பதிலாக கமலா ஹாரிஸ் களமிறங்குகிறார்.
டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையே காரசாரமான விவாதங்கள் எழுந்தன. மேலும் இருவருக்கும் குறிப்பிட்ட சில சம்பவங்களும் நடந்தன. அதாவது ட்ரம்பை பிரச்சாரத்தின்போது சுட்டுக்கொல்ல முயற்சித்தனர். இதனால் அவர் நூழிலையில் உயிர் தப்பினார். அதேபோல், கமலா ஹாரிஸுக்கு அவர் அணிந்த கம்மலால்கூட சர்ச்சை உண்டானது.
கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது அவருக்கு பெரும் பலமாக இருந்து வருகிறது. கமலா ஹாரிஸுக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக அவருக்கு ஆதரவாக இந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளரும், ஆஸ்கார் விருது வென்றவருமான ஏ.ஆர்.ரஹ்மான் பரப்புரையில் களமிறங்க உள்ளார். அவர் தன்னுடைய இசை மூலமாக கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட உள்ளார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.
நவம்பர் மாதம் 5ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கமலா ஹாரிஸும் ட்ரம்பும் சமபலம் வாய்ந்தவர்கள் என்பதால், யார் அடுத்த அதிபர் ஆவார் என்பதுதான் ஒட்டுமொத்த உலக நாடுகளின் ஒரே எதிர்பார்ப்பாக உள்ளது.