கள்ளத்தோணியில் வந்திறங்கிய கஞ்சிபானி இம்ரான், தமிழக கடலோரப் பகுதிகளுக்கு ஹை அலெர்ட்!!

கஞ்சிபானி இம்ரான்
கஞ்சிபானி இம்ரான்

கஞ்சிபானி முகம்மது நஜிம் இம்ரான், ஸ்ரீலங்காவின் நிழலுலக தாதா. கிறிஸ்துமஸ் நாளில் இலங்கையிலிருந்து தப்பித்து, ராமேஸ்வரத்திற்கு வந்து சேர்ந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஸ்ரீலங்காவில் இவர் மீது ஏராளமான கொலை, கொள்ளை, கடத்தல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

2019வரை துபாயில் மறைந்திருந்த கஞ்சிபானி இம்ரானை, இலங்கை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். அவர் மீதான விசாரணைகள் ஆரம்பமாகின. இந்நிலையில் இலங்கையின் நீதிமன்றம் இம்ரானுக்கு ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து அவர் தலைமறைவானார்.

கஞ்சாபனி இம்ரானுக்கு பல்வேறு சர்வதேச கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு உண்டு. ஸ்ரீலங்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் உள்ள போதை மருந்து நெட்வொர்க்கிடம் இணைந்து பணியாற்றியிருக்கிறார். ஹாஜி அலி என்னும் பாகிஸ்தானைக் சேர்ந்த குழுவும், ஸ்ரீலங்காவின் குணசேகரன் குழுவோடும் இம்ரனுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு.

குணசேகரன் குழுவில் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறியவர்களும் உண்டு. போதைப் பொருட்களை மட்டுமல்ல ஏ.கே 47 துப்பாக்கிகளையும் கடத்துகிறார்கள். சென்ற ஆண்டு கேரளாவின் விழிஞம் கடற்கரையோரம் குணசேகரன் குழுவின் நடமாட்டம் இருந்ததாக செய்திகள் வெளியாகின.

குணசேகரன் குழுதான், கஞ்சாபானி இம்ரான் இந்தியாவுக்குள் நுழைய உதவி செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. தலைமன்னாருக்கு வந்த இம்ரான், தன்னுடைய ஆதரவாளர்களோடு ராமேஸ்வரத்திற்கு வந்திருப்பதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஏஜென்ஸி கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருக்கிறது.

இலங்கையிலிருந்து இம்ரான் தப்பித்திருப்பது பற்றி ஸ்ரீலங்கா அரசிடமிருந்து அதிகாரப்பூர்வமான செய்திகள் இல்லை. ஆனால், மத்திய உளவுத்துறை தந்த செய்திகளின் அடிப்படையில் தமிழக காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தின் கடலோரப் பகுதிகளுக்கு ஹை அலெர்ட் உத்தரவு தரப்பட்டுள்ளது.

தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க, இம்ரானின் ஊடுருவல் குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறது. 'இந்திய கடலோரக் காவல்படையினரின் கடுமையான கண்காணிப்பை மீறி, இம்ரானால் எப்படி தமிழ்நாட்டிற்குள் நுழைய முடிந்தது? இதனால் தமிழ்நாட்டில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துவிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. உடனே கைது செய்து நாட்டை விட்டு வெளியேற்றவேண்டும்‘ என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com