தூத்துக்குடி மாவட்டம், சிறுத்தொண்டநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி நேத்ரா. இவர் நடந்து முடிந்த பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 600க்கு 598 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். மேலும், பொறியியல் படிப்புகளுக்காக நடைபெற்ற கலந்தாய்வு தரவரிசைப் பட்டியிலிலும் முதலிடம் பெற்று சாதித்து இருக்கிறார்.
முன்னதாக, கடந்த பத்து தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை அழைத்து, நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் சார்பாக சென்னையில் பாராட்டு விழா ஒன்றை நடத்தினார். அந்த விழாவில் தங்களது பெற்றோர்களுடன் கலந்துகொண்ட அந்த மாணவ, மாணவியருக்கு நடிகர் விஜய் ஊக்கத் தொகையையும் சான்றிதழையும் வழங்கிப் பாராட்டினார். அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து 18 மாணவ, மாணவிகள் மட்டுமே இந்த விழாவில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டிருந்தனர். ஆனால், அந்தத் தேர்வுப் பட்டியலில் 600க்கு 598 மதிப்பெண்கள் பெற்ற மாணவி நேத்ராவின் பெயர் இடம் பெறவில்லை.
இதை அறிந்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றதற்காகவும், பொறியியல் தரவரிசைப்பட்டியலில் முதலிடம் பிடித்ததற்காகவும் மாணவி நேத்ராவை அவரது பெற்றோருடன் நேரில் அழைத்துப் பாராட்டினார். மேலும், அந்த மாணவியை ஊக்கப்படுத்தும் விதமாக ஒரு தொகைக்கான காசோலையையும், ஒரு கருப்பு பையையும் அதனுள் பெரியார் புத்தகங்களையும் வைத்துப் பரிசாகக் கொடுத்து இருக்கிறார். நடிகர் விஜய் தங்களை அழைத்துப் பாராட்டுவார் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த அவர்கள், தங்களது நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் அழைத்துப் பாராட்டி, தங்களை கௌரவப்படுத்தியால் பெரும் மகிழ்ச்சி அடைந்து இருக்கின்றனர்.