பெண் குழந்தைகள் பாதுகாப்பு: முதலிடம் பிடித்த தென்காசி! - கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களுக்கு முதல்வர் விருது!"

cm stalin honours
cm stalin honoursimage source:Dailythanthi
Published on

குழந்தைகள் பாலின விகிதத்தை உயர்த்த சிறப்பாக செயலாற்றிய மாவட்டங்களுக்கு சாதனைகளைப் பாராட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விருதுகளை வழங்கி சிறப்பித்தார். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் இரண்டாம் இடம் பிடித்து "மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு விருதை" பெற்றது.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமான பிப்ரவரி 24, 2025-26 ஆம் ஆண்டிற்கான பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்த சிறப்பாக செயலாற்றிய மூன்று மாவட்ட நிர்வாகிகளின் சாதனைகளைப் பாராட்டி, ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுப் பத்திரங்களை முதல்வர் வழங்கினார்:

  • முதலிடம் : தென்காசி (₹1,00,000 மற்றும் பாராட்டுப் பத்திரம்)

  • இரண்டாம் இடம் : கன்னியாகுமரி (₹75,000 மற்றும் பாராட்டுப் பத்திரம்)

  • மூன்றாம் இடம் : திருநெல்வேலி (₹50,000 மற்றும் பாராட்டுப் பத்திரம்)

கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை, நாகர்கோவில் உள்ளிட்ட 5 வட்டாரங்களில் மேற்கொள்ளப்பட்ட தீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகளால் பெண் குழந்தைகளின் பாலின விகிதம் 965லிருந்து 990.6 ஆக அதிகரித்துள்ளது. இதற்கான பாராட்டுச் சான்றிதழை கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஆர். அழகுமீனாவிடம் தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி கௌரவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், சமூக நலத்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் சமூக நல இயக்குனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த சாதனை குறித்து பேசிய மாவட்ட கலெக்டர், நாகர்கோவில், தக்கலை, ராஜாக்கமங்கலம், மேல்புறம் ஆகிய 5 வட்டாரங்களில் பெண் குழந்தைகளின் பாலின விகிதம் குறைவாக இருந்ததாக கண்டறியப்பட்டதாகவும், அதற்காக தீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் தெரிவித்தார். இதன் விளைவாக மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பாலின விகிதம் அதிகரித்துள்ளது என்று கூறினார்.

பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ் பெண் சிசுக்கொலை தடுப்பு மற்றும் பெண் கல்வியை உறுதி செய்ய பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டதாக கூறினார். அத்துடன் அனைத்து கர்ப்பங்களும் 100% பதிவு செய்யப்பட்டு, கர்ப்ப கால கண்காணிப்பு பிரசவம் வரை PICME எண் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது என்றார். அத்துடன் மாவட்டத்தில் உள்ள 233 ஸ்கேன் மையங்களில் PCPNDT சட்டத்தின்படி கருவின் பாலினம் கண்டறிதல் தடுக்கப்படுவதை உறுதி செய்ய தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன என்று கூறினார்.

பள்ளிகளில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு, பெண் குழந்தைகள் பிறந்தால் மரக்கன்றுகள் வழங்கி கௌரவித்தல் போன்ற புதுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறியவர் இந்த வெற்றிக்குக் காரணம் சமூக நலத்துறை, சுகாதாரத்துறை, காவல்துறைை, பள்ளி கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் போன்ற துறைகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட்டதே இதன் வெற்றிக்கு காரணம் என்று கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com