கொரோனா முதல் அலையின் போது, தமிழ்நாட்டில் புழக்கத்தில் கொண்டு வரப்பட்ட கபசுர குடிநீர் பற்றிய செய்திகள், அதன் மூலம் கொரோனா பாதிப்பு குறைக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தன.
கொரோனா வைரசின் வீரியத்தைக் கட்டுப்படுத்தும் மூலக்கூறுகள் கபசுர குடிநீரில் இருப்பதால் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பை குறைக்க உதவுகிறது. கொரோனா மட்டுமல்ல காய்ச்சலை ஏற்படுத்தும் அனைத்து வைரஸ் தாக்குதல்களில் இருந்தும் உயிரை பாதுகாக்க கபசுர குடிநீர் உதவியுள்ளது.
கபசுர குடிநீரில் சுக்கு, திப்பிலி, லவங்கம், சிறுகாஞ்சொறி வேர், ஆடாதொடா இலை, கற்பூரவல்லி இலை, நில வேம்பு, கோரைக்கிழங்கு, கடுக்காய்த்தோல் உள்ளிட்ட 15 மூலிகைகள் இடம் பெற்றுள்ளதால் இந்த சூரணத்தை கொதிக்க வைத்து குடிக்கும்போது பக்க விளைவு ஏற்படுவதில்லை என்று மத்திய ஆயுஷ் அமைச்சகமும் உறுதிப்படுத்தியிருக்கிறது.
தமிழக அரசின் 'டாம்கால்' நிறுவனம் கபசுர பொடியை அதிக அளவு தயாரித்து ஒவ்வொரு ஊர்களுக்கும் அனுப்பி வந்தது. மூன்றாவது அலையின் போது கபசுர குடிநீர் அனைத்து இடங்களிலும் கிடைக்க ஆரம்பித்தன.
கபசுர குடிநீர் பவுடரை கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி மருந்தாக இந்தியா முழுவதும் விநியோகிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதற்காக தமிழக அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த 2020-2021ம் ஆண்டு தமிழகத்தில் 3 லட்சம் கிலோ வரை மக்கள் பயன்பாட்டில் இருந்ததாக சொல்லப் படுகிறது.
டாம்கால் நிறுவனத்தின் கபசுர குடிநீர் சூரணம் தயாரிக்கும் தொழிற்சாலை, சென்னையில் கேளம்பாக்கம் அருகே இயங்கி வருகிறது. கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் வழக்கத்தை விட அதிக அளவுக்கு கபசுர குடிநீர் சூரணம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
கபசுர குடிநீரோடு, கொரோனா சம்பந்தப்பட்ட ஆயுர்வேதம், யோகா, சித்த மருத்துவம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட அனைத்து வகை சிகிச்சை முறைகளையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.
கொரோனா நோய் தொற்றைப் பொறுத்தவரை 50 சதவீதம் பாரம்பரிய மருத்துவ முறை மற்றும் 50 சதவீதம் அலோபதி மருத்துவத்தை பயன்படுத்துவது நல்லது என்கிறார்கள், மருத்துவ ஆலோசகர்கள்.