நாம் நிம்மதியாக உறங்க, தங்கள் உறக்கம் தொலைத்து எதிரிகளிடம் இருந்து நாட்டைப் பாதுகாக்கும் ராணுவ வீரர்களின் எண்ணற்ற தியாகங்களை அறிவோம். இந்திய எல்லையில் காவல் காத்து நம் நாட்டினை எதிரிகளிடம் இருந்து காக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்களை கவுரவிக்கவும் தேசம் காக்க உயிர் தியாகம் செய்த வீரர்களின் நினைவைப் போற்றும் தினமாக கார்கில் வெற்றி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
தங்களது வீட்டை விட்டு உற்றார் உறவுகளைப் பிரிந்து தொலைதூரம் சென்று இரவு பகல் பாராமல் கடும் குளிர் வெயிலையும் பொருட்படுத்தாமல் நாட்டு மக்களின் பாதுகாப்புக்காக எல்லையில் நின்று காவல் காக்கும் பணியில் உள்ள ராணுவ வீரர்களை தேசத்தின் எல்லைக்காவல் தெய்வங்கள் என்றும் சொல்லலாம். அவர்களின் அர்ப்பணிப்பான பணி அத்தகையது. ஆம் 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் மீதான பாகிஸ்தான் தாக்குதலில் தங்கள் இன்னுயிரையும் இழந்து இந்தியாவைக் காத்து வெற்றிவாகை சூடிய. வீரர்களின் நினைவாக இந்தய அரசு அறிவித்த தினமே கார்கில் வெற்றி தினம்.
நம் அண்டை நாடான பாகிஸ்தான் பலமுறை நம் மீது தொடுத்திருந்தாலும் அதில் உலகளாவிய அளவில் கவனம் பெறப்பட்ட போர் கார்கில் போர்தான். 1999 ஆம் ஆண்டு மே மூன்றாம் தேதி பாகிஸ்தானின் ராணுவ வீரர்கள் இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் எல்லையில் உள்ள கார்கில் பகுதிக்குள் ஊடுருவி டைகர் மலை, ரொலோலிங் மலை, பத்ரா டாப் உள்ளிட்ட பகுதிகளை கைப்பற்றினர். இதையறிந்ததும் பாகிஸ்தானுக்கு பதிலடி தந்து இந்தப் பகுதிகளை மீட்க களத்தில் இறங்கிய இந்திய ராணுவ வீரர்கள் ஆபரேஷன் விஜய் எனும் திட்டத்தை வடிவமைத்து ஆயிரக்கணக்கான வீரர்களுடன் பாகிஸ்தான் ராணுவத்துடன் போரிட்டனர்.
உலக நாடுகள் உற்றுநோக்கும் அளவுக்கு இரவு பகல் பாராமல் சுமார் மூன்று மாதம் போர் நடந்தது. இந்த போரில் இரு நாடுகளின் தரப்பிலிருந்தும் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் வீரமரணத்தை தழுவினர். ஆனாலும் இந்திய ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் ராணுவத்துடன் தொடர்ந்து கடுமையாக போரிட்டு அவர்கள் கைப்பற்றிய பகுதிகளை மீட்டனர். அதே ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி அன்று கார்கிலில் கைப்பற்றப்பட்ட அனைத்து பகுதிகளையும் இந்திய ராணுவம் போரிட்டு வென்று மீட்டதுடன் பாகிஸ்தான் ராணுவத்தை அடக்கியது.
இந்த வெற்றி இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் இன்றி ஒட்டுமொத்த இந்தியர்களையும் பெருமை அடைய வைத்தது. வெற்றிப் பெருமிதத்துடன் போரில் இறந்த வீரர்களின் இழப்புகளும் வேதனைப்படுத்தியது. இந்தப் போரில் தமிழகத்தின் மேஜர் சரவணன் உள்பட 527 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ஆகவேதான் மத்திய அரசு போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களை நினைவு கூறும் வகையிலும் போரில் துணிச்சலுடன் பங்கேற்று வெற்றியைத் தேடித்தந்த ராணுவ வீரர்களை கௌரவிக்கும் வகையிலும் ஜூலை 26 ஆம் தேதியை கார்கில் வெற்றி தினமாக அறிவித்து ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி 24 வது வருட கார்கில் வெற்றி தினமான இன்று ராணுவ வீரர்களின் இந்த வீர செயலை நினைவு கூறும் விதமாக நாட்டின் பல பகுதிகளில் ராணுவ நிகழ்வுகள் நடந்து வருகிறது. லடாக் திராஸ் போர் நினைவிடத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி அனில்சவுகான் பங்கேற்று மறைந்த ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தினர். நாமும் அவர்களை நினைவு கூர்ந்து பெருமை படுத்துவோம்.