‘ஆணைய உத்தரவை மதித்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவோம்’ கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் அறிவிப்பு!

‘ஆணைய உத்தரவை மதித்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவோம்’ கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் அறிவிப்பு!
Published on

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக, தமிழ்நாடு அரசுகளுக்கு இடையே நீண்ட காலமாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இந்த நிலையில், கர்நாடகாவின் துணை முதலமைச்சரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார், ‘கர்நாடக மாநிலத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள முக்கிய திட்டம், மேகதாது அணை மற்றும் மகதாயி அணை திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக விரைவில் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்திப்பேன். விரைவில் அனுமதி பெறுவதற்கான பணிகளை மேற்கொள்வேன். மேகதாது அணை கட்டுவது எங்கள் உரிமை. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி. வேறு மாநிலங்களுக்கு துரோகம் செய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை’ என்று தெரிவித்திருந்தார்.

இது சம்பந்தமாக, நேற்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை டெல்லியில் சந்தித்தார். அப்போது, காவிரியில் தமிழகத்துக்கு ஜூன், ஜூலை மாதத்துக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரை உடனடியாக திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை வைத்தார். மேலும், கர்நாடக அரசு காவிரியில் இருந்து 22.54 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இது குறித்து, கர்நாடக துணை முதல்வரும், நீர்வளத் துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் கூறுகையில், “கர்நாடக மக்களின் குடிநீர் தேவையைத் தாண்டி, அணையில் மீதம் உள்ள தண்ணீரை தமிழகத்துக்குத் திறந்து விடுவோம். இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு மழை இல்லாததால் அணையில் நீர் இருப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும்போது இரு மாநிலங்களுக்கு தேவையான தண்ணீரும் கிடைக்கும். ஒருவேளை வறட்சி பாதிப்பு ஏற்பட்டால், வறட்சி காலத்தில் நீர் பங்கீடு செய்துகொள்ள ஃபார்முலா உள்ளது. அதன் அடிப்படையில் நீர் பங்கீடு செய்து கொள்ளப்படும். காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட ஆணையம் உத்தரவு பிறப்பித்தால் அதை நிச்சயம் மதிப்போம்” என்று தெரிவித்து இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com