கர்நாடகா தேர்தல் களம் - பாஜகவினர் ஜாதி அரசியல் செய்வதாகக் குமாரசாமி காட்டம்!

கர்நாடகா தேர்தல் களம் - பாஜகவினர் ஜாதி அரசியல் செய்வதாகக் குமாரசாமி காட்டம்!
Published on

எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஜாதி அரசியலை கையிலடுப்பதாக ஜனதா தள தலைவர் குமாரசாமி, பா.ஜ.கவை விமர்சித்து வருகிறார். பா.ஜ.க, காங்கிரஸ் என இரு கட்சிகளையும் சம தூரத்தில் வைத்து விமர்சனம் செய்து வந்த குமாரசாமியின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக பெங்களூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திப்புசுல்தான், உரிகவுடா, நஞ்சேகவுடா விவகாரத்தில் பொய் தகவல்களை பரப்பி கர்நாடகத்தில் பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதாக பா.ஜ.கவை விமர்சித்த குமாரசாமி, ஒக்கலிகர்களை எப்படியாவது ஒடுக்க வேண்டும் என்று பா.ஜனதா திட்டமிடுவதாக கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்.

இன்னும் இரண்டு மாதங்களில் கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 124 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் தலைமை அறிவித்திருக்கிறது. பா.ஜ.க தரப்பும் கடந்த இரண்டு மாதங்களாகவே சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளில் இறங்கியிருக்கிறார்கள்.

மைசூர் பகுதியில் உள்ள வருணா தொகுதியில் முதல்வர் போட்டியாளரான சித்தராமையா போட்டியிடுகிறார். தற்போது அந்த தொகுதியின் எம்.எல்.ஏவாக அவரது மகன் யதிந்திரா இருந்து வருகிறார். அவர் மறுபடியும் போட்டியிடுவாரா என்பது தெரியவில்லை.

காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி தலைவர்கள் அனைவருக்கும் இடம் தரப்பட்டுள்ளது. மறைந்த காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளின் வாரிசுகளுக்கு கூட இடம் தரப்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஓடி வந்த பா.ஜ.கவினருக்கும் இடம் தரப்பட்டுள்ளது.

அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களை தன் பக்கம் வளைப்பதற்கு குமாரசாமி தயாராகிவிட்டார். அரிசிகெரே தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏவான சிவலிங்கேவுடா ஜனதா தளம் கட்சியிலிருந்து காங்கிரஸ் கட்சியில் சேர்வதாக செய்தி வெளியானதும், அதை முறியடிக்க அவரது அரசியல் எதிரியான காங்கிரஸ் பிரமுகர் சசிதர் வீட்டிற்கே சென்று அவரை சந்தித்தார் குமாரசாமி. காங்கிரஸ் கட்சியிலிருந்து சசிதர் வெளியேறி, அதே அரிசிகெரே தொகுதியில் ஜனதா தளம் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிட்டிங் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் ஆறு பேருக்கு இடம், முதல் பட்டியலில் இடமில்லை. ஒருவேளை அடுத்த பட்டியலில் அவர்களது பெயர்கள் வரலாம். வராமலும் போய்விடக்கூடும். இனி மீதமுள்ள 100 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும்.

100 இடங்களிலும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடப்போகிறதா அல்லது கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் ஒதுக்கி, வலுவான கூட்டணியை அமைக்கப்போகிறதா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

பா.ஜக எதிர்ப்பில் தீவிரம் காட்டியுள்ள குமாரசாமி, காங்கிரஸ் எதிர்ப்பை குறைத்துக்கொண்டு அதிருப்தியில் உள்ளவர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார். எனினும், நேரடி போட்டி என்பது காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.கவுக்குத்தான் இருக்கப் போகிறது என்கிறார்கள். மாற்றுக் கட்சிகளில் குமாரசாமியின் ஜனதா தளமும், ஆம் ஆத்மி கட்சியும் களத்தில் இருக்கின்றன. கர்நாடகாவின் 224 தொகுதிகளிலும் கை சின்னமோ அல்லது தாமரை சின்னமோ வெல்வதற்குத்தான் வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com