தேர்தல் வாக்குறுதிகளாக தந்த ஐந்து முக்கியமான திட்டங்களில் இரண்டு திட்டங்களை சித்தராமையா அரசு அமலுக்கு கொண்டு வந்திருக்கிறது. ஒரே மாதத்தில் 40% வாக்குறுதிகளை நிறைவேற்றியிருப்பது கர்நாடக காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.
தமிழ்நாட்டில் தி.மு.க அரசு கொண்டு வந்த இலவச மகளிர் பேருந்து திட்டத்தைத்தான் ஆட்சிக்கு வந்ததும் காங்கிரஸ் அரசு முதலில் கொண்டு வந்தது. உசித் பிரயாணா என்னும் பெயரில் மகளிருக்கான இலவச பயணமும் தமிழகம் போல் அல்லாமல் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது. தினமும் ஒரே பகுதியில் பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. எந்த ரூட்டில் வேண்டுமானாலும் பெண்கள் பயணம் செய்ய முடியும் என்று தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் நடைமுறை கர்நாடகாவில் இல்லை.
அன்னபாக்யா என்னும் 10 கிலோ அரிசி இலவசமாக தரும் திட்டமும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிப்பவர்களுக்கு மட்டுமே தரப்படும். ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் 10 கிலோ இலவச அரிசி கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என்று முன்கூட்டியே அறிவித்திருந்தார்கள். ஆரம்பம் முதலே அன்னபாக்யா திட்டத்திற்கு ஏராளமான முட்டுக்கட்டைகள் ஏற்பட்டிருந்தன.
ரேஷன் கார்டில் எத்தனை குடும்ப உறுப்பினர்கள் உள்ளார்களோ அவர்களுக்கு தலா 10 கிலோ அரிசி வீதம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது. இதற்காக மாதந்தோறும் 2.29 லட்சம் டன் அரிசி தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டது. போதுமான அரிசி கையிருப்பில் இல்லாத காரணத்தால் கர்நாடக அரசு தடுமாறியது. திட்டமிட்டப்படி ஜூலை 1-ந் தேதி ஏழைகளுக்கு 10 கிலோ அரிசி வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக பா.ஜ.க அறிவித்தது.
ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, சத்தீஷ்கார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அரிசி கொள்முதல் காங்கிரஸ் அரசு முடிவு செய்தது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரிசி நிறுவனங்களிடம் இருந்தும் அரிசியை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் விடப்பட்டது. அனால், அரிசி விலை ஏறும் நேரத்தில், அரசுத் திட்டங்களுக்கு கொள்முதல் செய்ய நேரமாகும் என்பது தெரிய வந்தது.
ஆகவே, அன்னபாக்ய திட்டம் லட்சுமி பாக்யா திட்டமாக உருவெடுத்திருக்கிறது. அரிசிக்கு பதிலாக பணம் வழங்கும் திட்டம் இன்று முதல் தொடங்கப்படுகிறது. திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மாதம் ரூ.170 வழங்கப்படும் என்றும், ஒரு வீட்டில் 5 பேர் இருந்தால் ரூ.850 கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. போதுமான அளவுக்கு அரிசி கிடைத்ததும், பணம் வழங்குவது ரத்து செய்யப்பட்டு இலவச அரிசி வழங்குவதாக திட்டம்.
காங்கிரஸ் முன்வைத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆண்டுதோறும் 65 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. பெண்களுக்கு மாதம் 2000 ரூபாய் உரிமைத்தொகை தரும் திட்டத்திற்கு மட்டும் 42 ஆயிரம் கோடி செலவாகும் என்பதால் அதை அமலுக்குக் கொண்டு வருவதற்கு சில மாதங்களாகும். ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை தருவதாக சொன்ன தி.மு.க அரசே இரண்டு ஆண்டுகளுக்கு மேல் கால அவகாசம் கேட்டிருப்பதால் கர்நாடகத்தில் அமலுக்கு வர ஓராண்டாகிவிடும் என்கிறார்கள். யார் முந்துகிறார்கள், பார்க்கலாம்!