
கர்நாடகத்தில் பெண் அரசு அதிகாரி பிரதிமா கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது கார் டிரைவரை பெங்களூரு போலீஸார் கைது செய்துள்ளனர்.
பெங்களூருவில் சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் பெண் அதிகாரி பிரதிமா இறந்து கிடந்தார். இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அந்த நபர் அவரிடம் கார் டிரைவராக வேலைபார்த்திருந்ததும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பெங்களூரூ போலீஸ் ஆணையர் பி.தயானந்த் தெரிவித்தார்.
அந்த டிரைவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக வேலை செய்து வந்ததாகவும், பணியிலிருந்து நீக்கப்பட்ட ஆத்திரத்தில் அந்த பெண் அதிகாரியை கொலை செய்ததாகவும் அந்த டிரைவர் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அந்த டிரைவரின் பெயர் கிரண் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அதிகாரியை கொலைசெய்துவிட்டு 200 கி.மீ. தொலைவில் உள்ள சாம்ராஜ் நகருக்கு அவர் தப்பிச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது.
45 வயதான பிரதிமா ஒரு புவியியலாளர். மாநில சுரங்கம் மற்றும் புவியியல் துறையில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். அவர் கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டுள்ளார். அவரது கணவர் மற்றும் மகன் பெங்களூருவிலிருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள சிவமொக்கா மாவட்டத்தில் வசித்து வருகின்றனர்.
பிரதிமா கழுத்து அறுபட்ட நிலையில் இறந்து கிடந்தார். கடந்த சனிக்கிழமை மாலை 6 மணி வரை அலுவலகத்தில் பணி செய்துள்ளார். கிரண் பணியிலிருந்து நீக்கப்பட்டதால் வேறு ஒரு டிரைவர் அவரை வீட்டில் இறக்கிவிட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி அளவில் பிரதிமாவின் சகோதரர் இந்த கொலை பற்றி போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இரவு 8 மணி அளவில் கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். பிரதிமா தங்கியிருந்த வீடு தொட்டகல்ல சந்திராவில் உள்ளது. இரண்டு அடுக்குமாடி குடியிருப்பு.
அவர் பணி நிமித்தமாக பெங்களூரு மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கும் செல்வதுண்டு என்று கூறப்படுகிறது. சிவமொக்காவில் பட்டமேற்படிப்பு முடித்த அவர், பெங்களூருவில் கடந்த ஒருவருடமாக அதிகாரியாக வேலை செய்து வந்தார்.
மாநில சுற்றுச்சூழல் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரியான பிரதிமா, திறமையான அதிகாரி. அதிரடி சோதனைகள் நடத்தவும் அஞ்சாதவர் என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில் அவர் சில இடங்களில் அதிரடி சோதனை நடத்தியதாகவும் தெரியவந்துள்ளது.