முகநூல் நிறுவனத்திற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

முகநூல் நிறுவனத்திற்கு கர்நாடக உயர்நீதிமன்றம்  எச்சரிக்கை!

லகில் உள்ள மனிதர்களை இணைக்கும் முகநூல். தற்போது வழக்கு ஒன்றில் சரியான விசாரணைக்கு ஒத்துழைப்புத் தராமல் ஒரு மனிதரை சிறையில் தள்ளி அவரது வாழ்வைக் கேள்விக்குறியாக்கி உள்ளது. வழக்கு விசாரணைக்கு சரியாக ஒத்துழைப்புத் தரவில்லை எனில் முகநூலை இந்தியாவில் தடை செய்ய நேரிடும் என கர்நாடக ஹைகோர்ட்டின் எச்சரிக்கைக்கும் ஆளாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த சைலேஷ்குமார் என்பவர் சவூதியில் 25 ஆண்டுகளாக  பணியாற்றி வருகிறார். இவர் ஃபேஸ்புக்கில் ஆர்வமாக பதிவுகள் போட்டு வந்துள்ள நிலையில் இந்திய அரசு கொண்டுவந்த சிஏஏ மற்றும் என்ஆர்சி சட்டத்துக்கு ஆதரவாகவும் தனது முகநூலில் பதிவு செய்திருந்தார். இது தொடர்பாக அவருக்கு மிரட்டல் வந்ததால் உடனே அதை நீக்கியும் விட்டார். இதனால் பிரச்சினைகள் எழலாம் எனக் கருதி உடனே  தனது முகநூல் கணக்கையும் ரத்து செய்துவிட்டார்.

ஆனால் இது ஒருபுறமிருக்க  விஷமிகள் சிலர்  அவரது பெயரில் போலி கணக்கு தொடங்கி சவூதி அரசியல் குறித்தும் இஸ்லாம் குறித்தும் அவதூறு பரப்பியுள்ளனர். இந்தப் பதிவுகளின் தொடர்பாக சவுதியில் கைது செய்யப்பட்ட சைலேஷுக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்த அவரது மனைவி கவிதா கர்நாடக மாநிலம் மங்களூரு காவல் ஆணையரிடம் 2021 ஆம் ஆண்டு தன் கணவர் மீது எந்தத் தவறும் இல்லை, பதிவிட்ட விஷமிகள் மீது நடவடிக்கை எடுத்துத் தன் கணவரை விடுவிக்க உதவ வேண்டும் என புகார் அளித்தார். ஆனால் காவல்துறை எந்த  நடவடிக்கையும்  எடுக்காததால் கர்நாடக உயர் நீதிமன்றத்தை கவிதா அணுகினார். இதையடுத்து மங்களூர் போலீஸ் கமிஷனர் குமார் ஜெயின் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி இந்த வழக்கில் ஃபேஸ்புக் நிறுவனம் விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு தரவில்லை என்று தெரிவித்தார்.

 இதையடுத்து முகநூல் சார்பில் ஆஜரான வக்கீல் “எங்கு இந்த சம்பவம் நடந்தது என்று துல்லியமான தகவல் எங்களிடம் இல்லை” என்றார். பொறுப்பற்ற இந்தப் பதிலைக் கேட்டு கோபம் அடைந்த நீதிபதி கிருஷ்ணா தீட்சித் “ஃபேஸ்புக் நிறுவனம் விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு தராவிட்டால் உங்கள் செயல்பாட்டை இந்தியாவில் தடை செய்ய வேண்டியதிருக்கும் ” என எச்சரித்தார். உடனே முகநூல் நிறுவன வழக்கறிஞர் பதிலளிக்க நீதிபதியிடம்  ஒரு வாரகாலம்  அவகாசம் கேட்டதையடுத்து   ஜூன் 22 ஆம் தேதி பேஸ்புக் நிறுவனம் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்..

எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் சட்டத்தின் கேள்விகளுக்கு பதில் சொல்வது பொறுப்பான ஒன்று என்பதை நிறுவனங்கள் புரிந்து அதற்குத் தகுந்தாற்போல் நடந்து கொண்டால் நீதிமன்றங்களின் பணியும் குறையும் நிரபராதிகளும் பாதிக்கப்பட மாட்டார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com