காவிரியை மறுக்கும் கர்நாடகா - விவசாயிகள் போராட்டம் - உச்ச நீதிமன்றம் செல்லும் தமிழ்நாடு அரசு!

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
Published on

காவிரி நீரை மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து தஞ்சையில் விவசாயிகள் போராட்டமும், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் வழக்குப் பதிவும் செய்யப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் குறுவை சாகுபடியை நடப்பாண்டில் மேற்கொள்ளும் வகையில் ஜூன் மாதம் 12ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மேட்டூர் அணையில் நீரை திறந்து வைத்தார். மேலும், நடப்பாண்டில் 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யத் திட்டமிடப்பட்டது. ஆனால், தற்போது நீர் வரத்து குறைவாக உள்ள காரணத்தால் 3.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மட்டுமே குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய 38 டிஎம்சி தண்ணீரைத் தர தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்த நிலையில், இன்று தஞ்சையில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில், “கர்நாடகா அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி வருகிறது. காவிரி மேலாண்மை வாரிய உத்தரவையும் புறக்கணிக்கிறது. தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய 38 டிஎம்சி தண்ணீரைத் திறக்க மறுத்து வருவதால் குறுவை சாகுபடிக்காக பயிரிட்ட நிலங்கள் கருகி வருகின்றன. தற்போது இருக்கக்கூடிய 55 கன அடி நீரும் இன்னும் சில தினங்களுக்கு மட்டுமே பயன் தரும். தற்போதே கடைமடை பகுதிகளில் பயிரிட்ட விவசாயிகளின் பயிர்கள் கருகத் தொடங்கி விட்டன. எனவே, ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் காவிரி நீரை திறப்பதற்கு தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

அதேசமயம், தமிழ்நாடு அரசின் சார்பில் காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசின் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட உள்ளது. கர்நாடக அரசு தினமும் திறக்க வேண்டிய தண்ணீரை திறக்க வேண்டும். தண்ணீர் உபரியாக இருக்கும் நேரத்தில் மட்டுமே கர்நாடக அரசு தண்ணீரை திறந்து விடுகிறது. இந்த முறையை மாற்ற வேண்டும்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாட்டுக்குத் தேவையான தண்ணீரை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காவிரி மேலாண்மை வாரியம் தற்போது வினாடிக்கு 10,000 கன அடி தண்ணீரை 15 நாட்களுக்கு திறக்க உத்தரவிட்டிருக்கிறது. அந்த உத்தரவையும் கர்நாடக அரசு செய்யவில்லை. ஆனாலும் இந்த உத்தரவில் குறிப்பிட்டிருக்கக் கூடிய தண்ணீரின் அளவு தமிழ்நாட்டுக்குப் போதுமானதாக இல்லை. எனவே, வினாடிக்கு 18,000 கன அடி நீரை திறக்க வேண்டும். மேலும் கர்நாடகாவில் பெய்துள்ள மழைப் பொழிவு, உச்ச நீதிமன்ற தீர்ப்பு, காவிரி மேலாண்மை வாரியத்தின் நடவடிக்கை ஆகிய விபரங்களை தனது வழக்கில்  தமிழ்நாடு அரசு சுட்டிக்காட்டி உள்ளது. இந்த வழக்கு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும், நாளை மறுதினம் இந்த வழக்கு விசாரணைக்கு வரலாம் என்றும் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com