பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்: ஆளுநரை சந்தித்தார் கர்நாடக பேரவைத் தலைவர்!

U.T. Khader meet thawar Chand Gehlot
U.T. Khader meet thawar Chand Gehlot

கர்நாடக சட்டப்பேரவைத் தலைவர் யு.டி. காதர், பேரவைத் துணைத் தலைவர் ருத்ரப்பா லமானி மற்றும் சட்டப்பேரவைச் செயலாளர் எம்.கே.விசாலாட்சி ஆகியோருடன் சென்று மாநில ஆளுநர் தாவார்சந்த் கெலோட்டை சந்தித்துப் பேசினார்.

பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம், அது தொடர்பான சூழ்நிலை குறித்து பேரவைத் தலைவர், ஆளுநரிடம் விவரித்ததாக கூறப்படுகிறது.

நான்கு முன்னாள் அமைச்சர்கள் ஆர். அசோகா, டாக்டர் சி.என்.அஸ்வத் நாராயணன், வி.சுநீல்குமார் மற்றும் அரக ஞானேந்திரா உள்ளிட்ட 10 எம்.எல்.ஏ.க்களை  மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து புதன்கிழமை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அவையில் கண்ணியக்குறைவாக நடந்துகொண்டது, பேரவைத் தலைவர் இருக்கையை நோக்கி மசோதா நகல்களை கிழித்து வீசியது உள்ளிட்ட செயல்களுக்காக அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதனிடையே பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை அடுத்து எஞ்சியிருந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களும், மதச்சார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ.க்களும் வியாழக்கிழமை அவை நடவடிக்கைகளை புறக்கணித்தனர்.

ஜி. ஜனார்த்தன ரெட்டி (கல்யாண ராஜ்ய பிரகதி பக்ஷா) மட்டும் அவை நடவடிக்கையில் பங்கேற்றார்.

இதனிடையே பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களும் மாநில ஆளுநர் தாவார் சந்த் கெலோட்டை சந்தித்து மகஜர் அளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடக சட்டப்பேரவையில் புதன்கிழமை கடும் அமளி ஏற்பட்டது. கூட்டத்திற்கு தலைமை வகித்த பேரவைத் துணைத் தலைவர் மீது பா.ஜ.க. உறுப்பினர்கள் மசோதா நகல்களை கிழித்து வீசினர். இதையடுத்து பேரவைத் தலைவர் காதர், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 10 பேரை இந்த கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்தார்.

இதற்கு பதிலடியாக எதிர்க்கட்சியினரான பா.ஜ.க. மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள உறுப்பினர்கள் பேரவைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் நோட்டீஸை பேரவைச் செயலரிடம் அளித்தனர்.

முன்னதாக பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டணி கூட்டத்திற்கு வேலை செய்வதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை காங்கிரஸ் அரசு பணியமர்த்தியதாக கூறி  எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com