கலைஞர் நூற்றாண்டு விழா: திமுக ஒரு வருட கொண்டாட்டம்!

கலைஞர் நூற்றாண்டு விழா: திமுக ஒரு வருட கொண்டாட்டம்!
Published on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகவின் உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம் நேற்று காலை 11 மணி அளவில் அண்ணா அறிவாலயத்தில் துவங்கியது. இந்தக் கூட்டத்தில், கலைஞர் நூற்றாண்டு விழாவை இந்த ஆண்டு ஜூன் 3 ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜூன் 3 ம் தேதி வரை கொண்டாட திமுக உயர் நிலை செயல் திட்ட குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. ஜூன் 3ம் தேதி வட சென்னையில் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இணைய வசதியுடன் கூடிய நவீனமான கலைஞர் நூற்றாண்டு படிப்பகங்கள் தொடங்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை வரும் ஜூன் 3 ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜூன் 3 ம் தேதி வரை கிட்டத் தட்ட ஒரு வருட காலம் கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

இதனையடுத்து திருவாரூர் அருகே அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை வருகிற ஜூன் 20ம் தேதி பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் திறந்து வைப்பார் எனவும் முடிவு செய்யப் பட்டது.

இது குறித்து தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..

தமிழினத்தின் மேன்மைக்காகவும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் தன் வாழ்நாளெல்லாம் உழைத்த மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை ஆண்டு முழுவதும் கொண்டாடி அவரது சாதனைச் சரித்திரத்தை இல்லம்தோறும் எடுத்துச் செல்வோம்! கிளைக் கழகம் முதல் தலைமைக் கழகம் வரை அவர் புகழ் போற்றும் நிகழ்ச்சிகள் நடத்தி, புத்துணர்வு பெற்று, கழகத்தின் 75-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம்! ” என தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com