மாற்றுத் திறனாளிகள் என பெயரிட்டவர் கலைஞர் தான்! மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சி !

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

சென்னை கலைவாணர் அரங்கத்தில், மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற “உலக மாற்றுத்திறனாளிகள் தினம்-2022” விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வு வாகனத்தையும் கொடியசைத்து துவக்கிவைத்தார்.

தற்போது வருவாய்த்துறை மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் ரூ.1000ல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அப்போது மாற்றுத்திறனாளிகள் தயாரித்த கைவினைப் பொருட்கள் மற்றும் நவீன உதவி உபகரணங்கள் கண்காட்சியையும் முதலமைச்சர் தொடங்கி வைத்து அதனை பார்வையிட்டார்.

மாற்றுத்திறனாளிகளின் பாதை
மாற்றுத்திறனாளிகளின் பாதை

மாற்றுத்திறனாளிகளைத் திறமையாளர்களாக மாற்ற வேண்டும் என அரசு உறுதி எடுத்துள்ளதாகவும், அனைத்து நாட்களுமே மாற்றுத்திறனாளிகளுக்கு நன்மை செய்கிறோம் என்றும் கூறினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்பட்டுவிடக் கூடாது என அரசு செயல்பட்டு வருவதாகக் கூறிய அவர், ஒரே ஒரு மாற்றுத்திறனாளி கூட துன்பம் அடைய கூடாது என்றும், ஊனமுற்றோர் என கூறக்கூடாது, மாற்றுத்திறனாளிகள் என புதிய பெயரை அளித்தவர் கலைஞர் தான் எனவும் நினைவு கூர்ந்தார்.

உடல் குறைபாடாக இருக்கலாம் ஆனால் உள்ள குறைபாடு இல்லை அறிவு குறைபாடு இல்லை என்பதை உணர்ந்து போற்ற வேண்டும். பாதிக்கப்பட்டிருப்பவர்களைச் சிறப்பு கவனம் செலுத்திக் கவனிக்க வேண்டும். சமூகத்தில் மற்ற தரப்பினர் அடையும் அனைத்து வசதிகளையும் மாற்றுத்திறனாளிகளும் பெற்றடைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகளின் உரிமை என உருவாக்கிய பாதை தான் மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள அன்பு பாதை. அந்த மகிழ்ச்சிக்கு ஈடு எதுவும் இல்லை. போட்டிகள் வைப்பதன் மூலம் அவர்கள் ஆற்றல் வெளிப்பட்டு சமூகத்தில் தடையற்ற சூழல் உருவாகும். முன்பெல்லாம் மாற்றுத்திறனாளிகள் வீட்டிற்குள் முடங்கி விடும் காலம் இருந்தது. தற்போது முன்னேறி போராடி வெற்றி பெறுகின்றனர் என்று தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகள் பணிக்கு சென்று பணி செய்யாமல், வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என்ற சூழலை உருவாக்க உள்ளோம். அதற்காகப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

வருவாய் துறை மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் கண் பார்வையற்றோர் உள்ளிட்ட 4,39,315 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.1000த்தில் இருந்து ரூ.1500 ஆக ஜனவரி 1ம் தேதி முதல் உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் அரசிற்கு ஆண்டிற்கு 263 கோடியே 58 லட்சம் கூடுதல் செலவாகும் என்றும் குறிப்பிட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com