குஜராத் முதல்வராக இருந்த மோடி, 2014ல் நடந்த மக்களவைத் தேர்தலில் வாரணாசி, வதோதரா என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டிலும் மகத்தான வெற்றியைப் பெற்றாலும் வாரணாசி தொகுதியை மட்டும் தக்க வைத்துக் கொண்டார்.
தன்னுடைய சொந்த மாநிலத்தைச் சேர்ந்த தொகுதி என்றாலும், வதோதரா தொகுதியின் எம்.பி பதவியை ராஜினாமா செய்துவிட்டார். பின்னர் 2019ல் நடந்த தேர்தலிலும் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார்.
வரும் தேர்தலில் மூன்றாவது முறையாக வாரணாசியில் போட்டியிடுவார் என்கிறார். கூடவே காசியோடு நெருங்கியத் தொடர்புடைய ராமேஸ்வரத்திலும் போட்டியிடுவார் என்றும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. பிரபல ஆங்கிலப் பத்திரிக்கையான சண்டே கார்டியன் இது பற்றி செய்தி வெளியிட்டிருக்கிறது.
காசி சென்றாலே ராமேஸ்வரம் சென்றுவிட்டு வரவேண்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. வாரணாசியில் போட்டியிடும் பிரதமர், இம்முறை ராமேஸ்வரத்திலும் நிச்சயம் போட்டியிடுவார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மோடிக்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையேயான தொடர்பு ஐந்தாண்டுகளுக்கு முன்னரே ஆரம்பமாகிவிட்டது. மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நினைவாக ஒரு மணிமண்டபத்தை முதலில் திறந்து வைத்தார். ராமேஸ்வரத்திற்கும் அயோத்திக்கும் இடையே விரைவு ரயில் தொடங்கப்பட்டது. தனுஷ்கோடிக்கு புதிய சாலை அமைக்கப்பட்டது
மண்டபம் - பாம்பன் இடையேயான கடலில் புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் புதிய பாலம் கட்டும் பணியும் ஆரம்பமாகியுள்ளது. குஜராத்தில் நிறுவப்பட்டுள்ள 108 அடி அனுமன் சிலை போன்று இந்தியாவின் நான்கு திசைகளிலும் அனுமன் சிலை நிறுவும் திட்டமும் உள்ளது.
நான்கில் ஒன்றாக ராமேஸ்வரத்தில் அனுமன் சிலை அமைக்கப்படுவதற்கான அடிக்கல் நாட்டப் பட்டது. சமீபத்தில் நடைபெற்ற காசி தமிழ் சங்க நிகழ்ச்சிகளிலும் ராமேஸ்வரம் முன்னிறுத்தப்பட்டது. முதல் நாள் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், 'வட இந்தியாவுக்கு ஒரு காசி போல், தென்னிந்தியாவுக்கு ராமேஸ்வரம், இரண்டிற்கும் ஒன்றோடு ஒன்று நெருங்கியத் தொடர்பு உள்ளது' என்றார்.
இந்நிலையில் ராமர் பாலம் பற்றிய சர்ச்சையும் தூசு தட்டப்பட்டிருக்கிறது. சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அதனை வலியுறுத்தி தி.க சார்பில் போராட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் ஓரணியில் நின்று போராடவேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிவித்திருக்கிறார்.
ஆக, இதோ தேர்தல் வந்தேவிட்டது!!