கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா நிறைவு - இருநாட்டு மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடந்ததா? வெளியுறவுத்துறை மௌனம்!

கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா நிறைவு - இருநாட்டு மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடந்ததா? வெளியுறவுத்துறை மௌனம்!

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று முடிவுக்கு வருகிறது. இந்திய, இலங்கை மீனவர்கள் பெருமளவில் பங்கேற்கும் முக்கியமான நிகழ்வாக தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்களின்றி எளிமையாக நடந்தது. இம்முறை விமரிசையாக நடந்து முடிந்திருக்கிறது.

இலங்கை வசமுள்ள கச்சத்தீவில் நடைபெறும் விழாவில் பங்கேற்க ராமேஸ்வரத்தில் இருந்து 2,193 பேர் 59 விசைப்படகுகள், 11 நாட்டு படகுகளில் வந்திருந்தார்கள். பின்னர் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இருநாட்டு மக்களும் பங்குபெற்ற சிறப்பு திருப்பலி நடந்தது. அதனை தொடர்ந்து 14 இடங்களில் சிலுவை பாதை வழிபாடு நடந்தது. இதில் பங்கேற்ற ஏராளமானோர் சிலுவையை ஏந்தி பாடல்களை பாடி வழிபாடு நடத்தினார்கள்.

இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து வந்த மீனவர்கள் பல ஆண்டுகளுக்கு பிறகு நேரில் சந்தித்து பேசும் வாய்ப்பாக இது அமைந்தது. நேற்றிரவு தேவாலயம் மற்றும் அங்கு அமைக்கப்பட்டிருந்த பெரிய பந்தல்களில் தங்க வைக்கப்பட்டார்கள். இரவு தேர்பவனியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை இலங்கை அரசு செய்திருந்தது.

பலத்த பாதுகாப்பு கச்சத்தீவு விழாவை முன்னிட்டு ராமேசுவரம் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான 2 அதிநவீன கப்பல்கள், கடலோர காவல் படைக்கு சொந்தமான 5 கப்பல்கள் இரவு, பகலாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதைத்தவிர கடலோர போலீசார், மீனவர்கள் உதவியுடன் மீன்பிடி படகுகளில் ரோந்து சென்று வருகின்றனர்.

இருநாட்டு மக்கள் பங்கு பெற்ற திருப்பலியில் தமிழ், சிங்கள மொழியில் ஆராதனை பாடல்கள் பாடப்பட்டது. தொடர்ந்து உலக நன்மை வேண்டி பிரார்த்தனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் விழா முடிவடைந்தது. இருநாட்டைச் சேர்ந்த மீனவர்கள் திரளாக கலந்த கொண்டிருந்தார்கள்.

கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயத்திருவிழா நடைபெறும்போதெல்லாம் மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெறுவது வழக்கம்தான். இம்முறையும் இருதரப்பு மீனவர்கள் சந்திப்புக்கும், ஆலோசனை கூட்டத்துக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்படவேண்டும். இலங்கையில் கைப்பற்றப்படும் தமிழக மீனவர்களின் படகுகள் விடுவிக்காமல் அரசுடமையாக்கப்பட்டு ஏலம் விடப்படுவதையும் தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கைகள் வைத்திருக்கிறார்கள்.

திருவிழாவில் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டதாகவும் இரு நாட்டு மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. பேச்சுவார்த்தை பற்றிய செய்திகள் இதுவரை வெளியாகவில்லை. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் இலங்கை, இந்திய வெளியுறத்துறை அமைச்சக அதிகாரிகளிடமும் தகவல் இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com