பாரத் ராஷ்டிர சமிதி கட்சி (பி.ஆர்.எஸ்.) பா.ஜ.க.வின் ‘பி’ அணியாக செயல்படுகிறது. அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான கே.சந்திரசேகர ராவ், பிரதமர் மோடியின் கைப்பாவையாக செயல்படுகிறார். பி.ஆர்.எஸ். இடம்பெறும் அணியில் காங்கிரஸ் இருக்காது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறினார்.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மீது கடும் தாக்குதல் தொடுத்த ராகுல் காந்தி, கே.சி.ஆர். மற்றும் அவரது கட்சித் தலைவர்கள் ஊழல் புகார்கள் காரணமாக பா.ஜ.க.வுக்கு அடிமையாகிவிட்டனர் என்று கூறினார்.
தெலங்கானாவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிஆர்எஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கம்மம் முன்னாள் எம்.பி. பொங்குலேட்டி ஸ்ரீனிவாச ரெட்டி, முன்னாள் அமைச்சர் ஜுப்பள்ளி கிருஷ்ணராவ் உள்ளிட்ட 35-க்கும் மேலான தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்த நிலையில் கம்மம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று ராகுல்காந்தி பேசியதாவது: காங்கிரஸ் எப்போதுமே பா.ஜ.க.வை எதிர்த்து வந்துள்ளது. ஆனால், கே.சி.ஆரின் பாரத் ராஷ்டிர சமிதி, பா.ஜ.க.வின் பி அணியாகச் செயல்படுகிறது. பிரதமர் மோடிதான் அவரை இயக்கிவைக்கிறார்.
காங்கிரஸ் கட்சி சமீபத்தில் நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் ஊழல் மற்றும் ஏழை மக்களுக்கு எதிரான பா.ஜ.க.வை போராடி வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தது. ஏழைமக்கள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவால்தான் கர்நாடகத்தில் பா.ஜ.க. வெற்றிபெற முடிந்தது.
பணக்காரர்கள் ஆட்சி அதிகாரத்தின் பக்கம் இருக்கிறார்கள். ஆனால், ஏழை மக்கள், சிறுபான்மையினர், விவசாயிகள், சாதாரண மக்கள் எங்கள் பக்கம் இருக்கின்றனர். எனவே கர்நாடகத் தேர்தலில் வெற்றிபெற்றதைப் போல தெலங்கானா மாநிலத்திலும் கே.சி.ஆர். கட்சியை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும்.
தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்டிர சமிதி (இப்போது பாரத் ராஷ்டிர சமிதி) காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே தேர்தலில் மும்முனைப் போட்டி இருக்கும் என்று முன்பு பேசப்பட்டு வந்தது. ஆனால், இப்போது தெலங்கானாவில் பா.ஜ.க. இருப்பதாகத் தெரியவில்லை. எனவே தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வின் பி அணியான கே.சி.ஆர். கட்சிக்கும்தான் நேரடிப் போட்டி இருக்கும்.
பா.ஜ.க. எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முயன்றபோது எதிர்க்கட்சி கூட்டணியில் கே.சி.ஆர். கட்சி இடம்பெற்றால் நாங்கள் (காங்கிரஸ்) அதில் இடம்பெறமாட்டோம் என்பதை முன்பே எதிர்க்கட்சித் தலைவர்களிடம் தெளிவுபடுத்திவிட்டோம் என்றார் ராகுல். காங்கிரஸ் தொண்டர்கள் சிங்கம் போன்றவர்கள். எதற்கும் அஞ்சமாட்டார்கள், கட்சிக்கு முதுகெலும்பு போன்றவர்கள். அவர்களின் ஆதரவுடன் கே.சி.ஆர். கட்சியை தேர்தலில் தோற்கடிப்போம்
பாரத் ஜடோ யாத்திரையின்போது தெலங்கானா மக்களில் பெரும்பான்மையினர் எங்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் யாத்திரை சென்றபோது, “நாங்கள் நாட்டை ஒன்றுபடுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறோம். ஆனால், வேறு சிலர் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கிறார்கள்” என்று கூறியிருந்தேன். அதுதான் இப்போது நடக்கிறது என்றார் ராகுல்.
வெறுப்பை கைவிட்டு அன்பை விதையுங்கள் என்று நான் சென்ற இடங்களில் எல்லாம் கூறிவந்தேன். மக்கள் அதை ஏற்றுக்கொண்டுள்ளனர். கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எப்போதும் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து வந்துள்ளனர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ள தலைவர்களை வரவேற்கிறேன் என்றார் ராகுல்காந்தி.