மகாராஷ்டிரத்தில் கால்தடம் பதிக்கும் கே.சி.ஆர். முயற்சி பலிக்காது: அஜித் பவார்!

மகாராஷ்டிரத்தில் கால்தடம் பதிக்கும் கே.சி.ஆர். முயற்சி பலிக்காது: அஜித் பவார்!

பாரத் ராஷ்டிர சமிதியை மகாராஷ்டிரத்தில் விரிவுபடுத்த நினைக்கும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் (கே.சி.ஆர்.) முயற்சி ஒருபோதும் பலிக்காது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான அஜித் பவார் தெரிவித்தார்.

புனேயில் செய்தியாளர்களிடம் பேசிய அஜித்பவார், மகாராஷ்டிரத்தில் கட்சியை விரிவுபடுத்த உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர்கள் மாயாவதி மற்றும் முலாயம் சிங் பலமுறை முயன்றும் அவை தோல்வியில் முடிந்த்தை சுட்டிக்காட்டினார்.

உ.பி.முதல்வராக இருந்தபோது முலாயம் சிங், மாயாவதி இருவரும் மகாராஷ்டிரத்தில் கட்சியை விரிவுபடுத்த முயன்றனர். ஆனால், அவர்களது முயற்சி வெற்றிபெறவில்லை. இப்போது தெலங்கானா முதல்வர் தன்னை ஒரு தேசிய தலைவர்போல் நிலைநிறுத்திக் கொள்ளும் நோக்கத்தில் பாரத் ராஷ்ட்டிர சமிதி கட்சியை விரிவுபடுத்த நினைக்கிறார். எனினும் மகாராஷ்டிரத்தில் அவரது முயற்சி பலிக்காது என்றார் அஜித் பவார்.

சந்திரசேகர ராவ் தெலங்கானா முதல்வராகவும் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். இங்கு கட்சியை விரிவுபடுத்தினால் யார் தலைவராக இருப்பார்கள். அக்கட்சியில் சேருபவர்களுக்கே தெரியும் தலைவராக முடியாது என்பது என்றார் அவர்.

மகாராஷ்டிரத்தில் பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதே என்று கேட்டதற்கு, நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. வேலையின்மையும் அதிகரித்துள்ளது. அப்படியிருக்கையில் விளம்பரங்கள், பேனர்களுக்கும், டி.வி. விளம்பரங்களுக்கும் ஏராளமான பணம் செலவிடப்படுகிறது என்றால் அதற்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று அஜித் பவார் கேள்வி எழுப்பினார்.

கடந்த மார்ச் மாதம் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், மகாராஷ்டிர மாநிலம் நான்தேத்தில் ஒரு கூட்டத்தில் பேசுகையில், பிரதமர் மோடியை முன்னிலைப்படுத்தி பா.ஜ.க.வும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயை முன்னிலைப்படுத்தி சிவசேனையும் அதிக அளவில் விளம்பரங்கள் வைத்திருந்ததை கடுமையாக குறைகூறி விமர்சித்திருந்தார்.

விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 மும், அவர்களுக்கு 24 மணிநேரமும் இலவச மின்சாரமும் வழங்க வேண்டும். விவசாயிகள் துரதிருஷ்டவசமாக உயிரிழக்க நேரிட்டால் அவருக்கு இன்சூரன்ஸ் தொகையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்று கே.சி.ஆர். கூறியிருந்தார். மேலும் தெலங்கானாவைப் போல விவசாயிகளின் விளைபொருள்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com