
தெலங்கானாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பாரத் ராஷ்டிர சமிதி கட்சி எம்.பி. கோதா பிரபாகர் ரெட்டி கத்தியால் குத்தப்பட்டார். சித்தாபெட் மாவட்டத்தில் சூரம்பள்ளி என்னுமிடத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.
தெலங்கானாவில் மேடக் தொகு எம்.பி.யான கோதா பிரபாகர் ரெட்டி, அந்தப் பகுதியில் வீதிவீதியாகச் சென்று பிரசாரத்தில் ஈடுப்ட்டிருந்தார். அப்போது அவரது அருகே வந்த நபர், கைகுலுக்க வருவதுபோல் வந்து, திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால், எம்.பி.யில் வயிற்றில் குத்தினார். எனினும் அவர் அருகில் இருந்த கட்சித் தொண்டர்கள் அந்த நபரை பிடித்துவிட்டனர்.
இதனிடையே கத்திக்குத்து காயமடைந்த கே.சி.ஆர். கட்சி எம்.பி. சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கோதா பிரபாகர் ரெட்டி, தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் நம்பிக்கைக்கு உரியவர் என்று சொல்லப்படுகிறது. தப்பாக் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக பிரபாகர் ரெட்டி அறிவிக்கப்பட்டிருந்தார். தெலங்கானாவில் வரும் நவம்பர் 30 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
இதனிடையே எம்.பி.யை கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் சித்தாபெட் போலீஸ் அதிகாரி ஸ்வேதா தெரிவித்தார்.