கேரள படகு விபத்து எதிரொலி! கன்னியாகுமரி சுற்றுலா படகுகள் கண்காணிப்பு தீவிரம்!

கேரள படகு விபத்து எதிரொலி! கன்னியாகுமரி  சுற்றுலா படகுகள் கண்காணிப்பு தீவிரம்!

கேரளா மாநில படகு விபத்தின் எதிரொலியாக சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படும் சுற்றுலா படகில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் இறங்கி உள்ளது. தமிழ் நாட்டில் அனைத்து சுற்றுலா தளங்களிலும் இது குறித்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடி பகுதி கடலில் நடைபெற்ற படகு விபத்தில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். மேலும் அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

தமிழகத்தில் தற்போது விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் குகன், பொதிகை, விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.

படகு ஒன்றில் சுமார் 150 பேர் பயணிக்கும் வசதி கொண்டது. சுற்றுலா படகில் செல்லும் அனைவருக்கும் லைப் ஜாக்கெட் (உயிர் காப்பு மிதவை) கொடுக்கப்பட்டு அதை அனைவரும் கட்டாயம் அணிய வேண்டும் எனவும், விவேகானந்த நினைவு மண்டபத்துக்கு சென்ற பிறகு தான் அதை அகற்ற வேண்டும் எனவும் தெரிவிக்க பட்டுள்ளது.

மேலும் படகில் பயணிக்கும் போது சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுக்க அனைவரும் எழுந்து நிற்க வேண்டாம் என சுற்றுலா பயணிகளுக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக ஊழியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். ஒரு படகில் 150 பேர் மட்டுமே பயணிக்கும் பொருட்டும், படகினில் அதிக சுற்றுலாப் பயணிகள் ஏறாதவாறும் கண்காணிப்பு பணியிலும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகள் உயிர்காப்பு கவசம் அணிய அறிவுறுத்த படுகிறார்கள் . அனைத்து பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தீவிரமாக இறங்கி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com