கேரள பட்ஜெட் 2023-2024! நிதியமைச்சர் பாலகோபால் தாக்கல்!

கேரள பட்ஜெட் 2023-2024!   நிதியமைச்சர் பாலகோபால் தாக்கல்!

கேரளாவின் 2023-2024 ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று சட்ட பேரவையில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் பாலகோபால்.

மத்திய பட்ஜெட்டில் வருவாயை அதிகரிப்பதற்கு மாநில அரசு முன் வைத்த எந்த திட்டத்திற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை எனவே அரசுக்கு புதிய வருவாய் இல்லாத நிலையில் மக்களை பாதிக்காத வகையில் வரிகளை அதிகரிப்பதில் இருந்து மாநில அரசு பின் வாங்க போவதில்லை என கேரள நிதியமைச்சர் பாலகோபால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

இதன் பின்னர் சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் உரையாற்றினார்.

கொரோனோ மற்றும் ஓகி போன்ற சவால்களை கேரள மாநிலம் சமாளித்துவிட்டன. இந்த சவால்களை கேரள அரசு தைரியமாக எதிர்கொண்டது. உள்நாட்டு உற்பத்தி அதிகரித்தது.

உலக பொருளாதார மந்தநிலையின் அச்சுறுத்தல் காரணமாக ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வை எதிர்கொள்ள தற்போதைய பட்ஜெட்டில் 2000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

ரப்பர் மானியத்திற்காக விவசாயிகளுக்கு ரூ.600 கோடி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேக் இன் கேரளாவுக்கு 1000 கோடி, விழிஞ்சம் ரிங்ரோடுக்கு 1000 கோடி, நீர்வழிப் பாதைக்கு 300 கோடி, மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்ட 25 நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும் என கேரள மாநில நிதியமைச்சர் பாலகோபால் தெரிவித்துள்ளார்.,

உயிரியல் பூங்காவுக்கு 20 கோடி, சபரிமலை விமான நிலையத்திற்கு 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளின் பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்காக ரூ.30 கோடியை ஒதுக்கீடு செய்துள்ள கேரள அரசு, போதை தடுப்புத் திட்டங்களுக்காக ரூ.15 கோடியை ஒதுக்கியுள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் அமைக்கும் திட்டத்துக்கு ரூ.8 கோடி ஒதுக்கியுள்ளது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாயும், மதுபானத்திற்கு 20 முதல் 40 ரூபாய் வரையும் விலை உயர்த்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா துறையில் வீட்டிலிருந்து வேலைத் திட்டத்துக்கு ரூ.10 கோடியும், ”வீட்டுக்கு அருகில் வேலை” திட்டத்துக்கு ரூ.50 கோடியும், டிக்கெட் விலையைக் கட்டுப்படுத்தும் திட்டத்துக்கு ரூ.15 கோடியும், வறுமை ஒழிப்புக்கு ரூ.50 கோடியும், துறைமுக மேம்பாட்டுக்கு ரூ.6000 கோடியும், நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.100 கோடியும், விவசாயத் துறை மேம்பாட்டுக்கு ரூ.971 கோடியும், கிராமப்புற மேம்பாட்டுக்கு ரூ.6294 கோடியும், குடும்பஸ்ரீ திட்டத்துக்கு ரூ.260 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என நிதியமைச்சர் பாலகோபால் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com