முறுக்கும் ஆளுநர், வெடிக்கும் முதல்வர் - மறுபடியும் ஒரு மோதல்!

பிணறாயி விஜயன் - ஆரிப் முகமது கான்
பிணறாயி விஜயன் - ஆரிப் முகமது கான்
Published on

கேரளாவில் முதல்வர் - ஆளுநர் மோதல் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறது. முன்னாள் அமைச்சர் சாஜி செரியனை மீண்டும் அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என்று முதல்வர் கேட்டபோது, சட்ட ஆலோசகர்களோடு ஆலோசித்த பின்னர் முடிவெடுப்பதாக ஆளுநர் ஆரிப் முகம்மது கான் குறிப்பிட்டிருக்கிறார்.

அரசியலமைப்பு சட்டம் குறித்து சாஜி செரியன், சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். 'அரசியலமைப்புச் சட்டம் என்பது மக்களை கொள்ளையடிப்பதற்காக ஆங்கிலேயர்களால் சொல்லப்பட்டு இந்தியர்களால் எழுதப்பட்டது. மதச்சார்பின்மை, ஜனநாயகம் போன்ற வார்த்தைகளெல்லாம் எங்கோ ஒரு மூலையில் அதில் எழுதப்பட்டுள்ளன' என்று பேசியிருந்தார்.

சாஜி செரியனை எதிர்த்து காங்கிரஸ் போராட்டங்களை அறிவித்தது. சர்ச்சை வலுத்ததால், முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோளின்படி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். தற்போது அவரை மீண்டும் அமைச்சரவையில் சேர்க்க முடிவெடுத்திருக்கிறார்கள்.

ஆளுநரோ இன்னும் ஒப்புதல் தரவில்லை. ஏற்கனவே முதல்வருக்கும் ஆளுநருக்கும் ஏழாம் பொருத்தம். தன்னை பொதுவெளியில் விமர்சிக்கும் அமைச்சர்களை அமைச்சரவையிலிருந்து நீக்குவேன் என்றும் ஆளுநர் தடாலடி காட்டியிருந்தார்.

அமைச்சரவையில் புதிய அமைச்சரை சேர்க்க முடியாது என்று ஆளுநர் மறுக்க முடியுமா? பதவிப்பிரமாணத்தை எழுதி கையெழுத்திட்டு ஆளுநருக்கு அனுப்பிவைத்துவிட்டு, அமைச்சராக தலைமைச் செயலகத்திற்கு செல்ல முடியுமா? சட்ட நடைமுறைகளில் இதற்கு இடமுண்டா என்று பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

அமைச்சரவையை நீட்டிக்கவேண்டும் என்று ஒரு மாநிலத்தின் முதல்வர் முடிவு செய்தால் ஆளுநர் அதை ஏற்றுக்கொள்வதுதான் மரபு. தி.மு.கவினருக்கும் தமிழக ஆளுநருக்கும் இடையே என்னதான் கருத்து ரீதியிலான மோதல்கள் இருந்தாலும் உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையில் சேர்க்கவேண்டும் என்றதும் தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் தந்தார். என்ன செய்யப்போகிறார் கேரள ஆளுநர்?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com